பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவின் கட்டுரையின் எதிரொலியாக, நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது. எச்சரிக்கை நிலைக்கு வரவும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில், பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டார்கள் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியிருந்தார்.
அதில், இந்த பொருளாதார சரிவு திடீரென்று ஏற்பட்டதல்ல. ஒரே நாளில் உருவானதும் அல்ல. பல ஆண்டுகளாக இதற்கான காரணங்கள் சேர்ந்து கொண்டே இருந்தன. இதை சரியாக கண்டறிந்து தேவையான மாற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம். ஒவ்வொரு காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத வகையில் 5.7 சதவிகிதத்தை சந்தித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்
ஜிடிபி வளர்ச்சியை நிர்ணயிக்கும் முறையை 2015ம் ஆண்டில் அரசு மாற்றியுள்ளது. ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த முறையை கைவிட்டு புதிய முறையை கையாண்டதால் வளர்ச்சி விகிதத்தை அது 200 அடிப்படை புள்ளிகள் அதிகமாக காட்டுகிறது. பழைய முறையில் அளவிட்டால், பொருளாதார வளர்ச்சி விகிதம் உண்மையாக 3.7 சதவிகிதம் மட்டுமே. இது மேலும் குறைவாகக் கூட இருக்கலாம்.
பொருளாதாரத்தை கட்டி உருவாக்குவதை விட, அழிப்பது எளிதானது. 1998-ம் ஆண்டில் இருந்த பொருளாதாரத்தை சீர்படுத்த தொண்ணூறுகளின் இறுதி மற்றும் 2000-த்தின் தொடக்கம் வரை பணியாற்ற வேண்டியிருந்தது. பொருளாதாரத்தை ஒரே நாளில் சீர்படுத்த யாரிடமும் மந்திரக் கோல் இல்லை. தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனை தர சில ஆண்டுகள் ஆகும். இதன் காரணமாகவே 2019-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தை சீர்படுத்துவது இயலாத காரியமாகிறது. மோசமான ஒரு சூழலை சந்தித்தே ஆக வேண்டிய நிலை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அவரது கருத்துக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது. எச்சரிக்கை நிலைக்கு வரவும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார்.
Ladies & Gentlemen, this is your copilot & FM speaking. Plz fasten your seat belts & take brace position.The wings have fallen off our plane https://t.co/IsOA8FQa6u
— Office of RG (@OfficeOfRG) 27 September 2017
இதுகுறித்த தனது டுவிட்டர் பதிவில், “லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன், நான் உங்கள் இணை விமானி மற்றும் நிதியமைச்சர் பேசுகிறேன். உங்கள் இருக்கை பெல்ட்டை கட்டிக் கொண்டு எச்சரிக்கை நிலைக்கு வரவும். நமது விமானத்தின் இறக்கைகள் விழுந்து விட்டன” என சாடியுள்ளார்.