இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் இடையே செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்பதற்காக, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று இந்தியா வந்தடைந்தார். தனது மனைவி அகி அபே வுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய போது, இருவரையும் பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் ஜப்பான் பிரதமருக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதன்பின், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தம்பதியரை பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து சென்றார். அவர்களை தொடர்ந்து வாகன அணிவகுப்பு சென்றது.
8 கி.மீ. தொலைவிலான இந்த பயணத்தின்போது சாலையின் இரு ஓரங்களிலும் பொதுமக்கள் கூடி நின்று, இரு தலைவர்களையும் வரவேற்று உற்சாகமாக கையசைத்தனர். இந்திய, ஜப்பான் தேசிய கொடிகளை அவர்கள் ஏந்தி இருந்தது இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
வழி நெடுகிலும் 28 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு, இந்திய கலாசாரத்தை பறை சாற்றும் ஆடல், பாடல்களை கொண்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். அதை தலைவர்கள் பார்த்து ரசித்தவாறு சென்றனர்.
அப்போது, அவர் செல்லும் வழியில் உள்ள குடிசை பகுதிகளெல்லாம் அவர் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக, பச்சை நிற திரை போட்டு குடிசைகளை அதிகாரிகள் மறைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொதுவாக நமது நாட்டில் அமைச்சரோ, அல்லது முதலமைச்சரோ இதுபோன்று வருகை தரும் போதெல்லாம் தெரு விளக்கை தற்காலிகமாக சரி செய்வது, ரெடிமேட் ரோட் போடுவது, 'திடீர்' ஸ்பீடு பிரேக்கர் அமைப்பது, சாலைகளை சுத்தம் செய்வது என்று அதிகாரிகள் திறம்பட வேலை செய்து அனைத்துக் குறைகளையும் மறைத்துவிடுவர்.
இங்கே, அகமதாபாத்தில் ஜப்பான் பிரதமர் கண்களில் இந்திய ஏழைகளின் அவலம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக பச்சை திரை போட்டு குடிசைகளையே மறைத்துள்ளனர். குஜராத்தின் முன்னாள் முதல்வர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.