சண்டிகரில் தன் நெருங்கிய உறவினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, தற்போது ஆறு மாத கர்ப்பமாக உள்ள 10 வயது பெண்ணுக்கு கரு கலைப்பு செய்ய மாவட்ட நீதிமன்றம் மறுத்து தீர்ப்பளித்தது.
சண்டிகரை சேர்ந்த 10 வயது சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக தொடர்ந்து பெற்றோரிடம் கூறி வந்ததையடுத்து, அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிடம் விசாரிக்கையில், சிறுமியின் உறவினர் ஒருவரே அவரை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பின், குற்றம்சாட்டப்பட்ட உறவினரான குல் பகதூர் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி சுமார் 26 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதால், தற்போதைய நிலையில் கருக்கலைப்பு செய்வது சிறுமியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுத்து உத்தரவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன், கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணின் கருவில் இதய குறைபாட்டுடன் குழந்தை வளர்வதால் அதனை கலைக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலும், அப்பெண் 26 வார கர்ப்பமாக இருந்தாலும், அக்குழந்தை பிறந்தால் தாய் மன ரீதியாக வேதனையடைவார் என அரிதான வழக்காகக் கருதி கருக்கலைப்பு செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.