ராஜஸ்தானில் பசுக்களை ஏற்றி வந்த தமிழக லாரிகள் மீது தாக்குதல்... பசுப்பாதுகாவலர்கள் அத்துமீறல்!

ராஜஸ்தானில் பசுக்களை ஏற்றிவந்த தமிழக லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழக கால்நடைத்துறை ஜெய்சால்மரில் இருந்து பசுக்களை வாங்கி, 5 லாரிகள் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வந்துகொண்டிருந்தது. அப்போது, பசுக்கள் கொண்டுவந்த லாரியில் என்.ஓ.சி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் அங்கு வந்த கும்பல் லாரிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த தாக்குதல் குறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தும் போலீஸார் மெத்தனமாக நடந்து கொண்டனர்.

இது குறித்து பார்மர் மாவட்ட எஸ்பி ககங்தீப் சிங்லா கூறியதாவது: இந்த சம்பவத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலையை பசுபாதுபாதுகாப்பு கும்பல் அடைத்தது. மேலும், பசுக்களை ஏற்றிவந்த லாரிகளுக்கு தீவைக்க முயற்சி செய்ததோடு, கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இதனை தடுத்து நிறுத்தினர். லாரியை ஓட்டிவந்த வந்த டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். லாரியில் இருந்த பசுக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவத்தின் தீவிரம் அறியாமல், சம்பவ இடத்திற்கு காலதாமதமாக வந்த போலீஸ் அதிகாரிகள் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

×Close
×Close