துணை ஜனாதிபதி தேர்தலிலும் அணி மாறி வாக்களித்த எம்.பி.க்களால் எதிர்கட்சிகள் கலக்கம் அடைந்திருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் ‘மதச்சார்பற்ற’ ஒருவரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆரம்பத்திலேயே கோரிக்கை வைத்தன. ஆனால் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவில் போதிய மெஜாரிட்டி வைத்திருக்கும் பா.ஜ.க. அதை கண்டுகொள்ளவில்லை. ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தையுடைய ராம்நாத் கோவிந்தை முன்னிறுத்தி, ஜனாதிபதி ஆக்கியது பா.ஜ.க.!
எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்பாராமல், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியை முன்கூட்டியே எதிர்கட்சிகள் வேட்பாளராக நிறுத்தின. இவரை ஆதரிக்க வேண்டிய அல்லது இவரைப் போலவே சுதந்திரப் போராட்ட பின்புலம் கொண்ட ஒருவரை நிறுத்த வேண்டிய நெருக்கடி பா.ஜ.க.வுக்கு ஏற்படும் என எதிர்கட்சிகள் கணித்தன.
ஆனால் அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் மீண்டும் சங்பரிவார் பின்னணி கொண்ட வெங்கையா நாயுடுவையே துணை ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ.க. நிறுத்தியது. ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை ஆதரித்த ஐக்கிய ஜனதா தளமும், பிஜூ ஜனதா தளமும் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரித்தன.
இந்தக் கட்சிகளில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 12 எம்.பி.க்களும், பிஜூ ஜனதா தளத்திற்கு 28 எம்.பி.க்களும் உள்ளனர். இந்தக் கணக்குப்படி பார்த்தால், எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் பெற்றதைவிட துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்திக்கு 40 எம்.பி.க்களின் ஆதரவு கூடுதலாக கிடைத்திருக்க வேண்டும். ஆனால் மீராகுமாருக்கு கிடைத்ததைவிட (225 எம்.பி.க்கள்), கோபாலகிருஷ்ண காந்திக்கு (244 எம்.பி.க்கள்) 19 எம்.பி.க்களின் வாக்குகளே கூடுதலாக கிடைத்திருக்கின்றன.
இந்த கணக்குப்படி பார்த்தால், மொத்தம் 21 எம்.பி.க்கள் கருப்பு ஆடுகளாக தங்கள் கட்சிகளின் முடிவுகளுக்கு மாறாக வாக்களித்திருக்கிறார்கள். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் கட்சி கொறடா மூலமாக உத்தரவு போடும் நடைமுறை கிடையாது. தவிர, ரகசிய முறையிலான வாக்குப்பதிவு அடிப்படையில் இந்தத் தேர்தல்கள் நடக்கின்றன. எனவே இதில் கட்சி தாவல் தடை சட்டம் பற்றிய கேள்விக்கு இடமில்லை.
தவிர, கட்சி மாறி வாக்களித்தவர்கள் எந்தக் கட்சியினர் என்பதை இதில் துல்லியமாக கண்டறிய முடியாது. எனினும் பா.ஜ.க.வுக்கு இணக்கமாக மாறியிருக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கள் 12 பேரில் சிலர் அணி மாறி வாக்களித்தார்களா? என்கிற விவாதம் நடக்கிறது. அதன்பிறகும் 18 பேர் அணி தாவியிருப்பதால், காங்கிரஸ் எம்.பி.க்களும்கூட இந்தப் பட்டியலில் இருக்கிறார்களோ என்னவோ?
மத்திய அரசுக்கு எதிராக அத்தனை பிரச்னைகளிலும் ஓங்கி குரலெழுப்பும் எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள், முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களில் அணி மாறி வாக்களிப்பது வியப்புதான்!