நாடு முழுவதும், 18.11 கோடி மக்கள், மானிய விலையில் காஸ் சிலிண்டர் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 14.5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் 477.46 ரூபாய் என்ற மானிய விலையில் அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பம், ஆண்டுதோறும் மானிய விலையில், 12 சிலிண்டர்களை மட்டுமே பெற முடியும். அதன் பிறகும் சிலிண்டர் வேண்டுமெனில், சந்தை விலையில் தான் அவர்களால் வாங்க முடியும்.
ஒரு சிலிண்டருக்கு தற்போது 84 ரூபாய் 54 காசு மானியமாக வழங்கப்படுகிறது. மானியம் போக சென்னையில் தற்போது ஒரு சிலிண்டரின் விலை 574 ரூபாய் 70 காசுகளாக உள்ளது. இந்நிலையில், சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை, அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியானது .
இதற்காக, அடுத்த ஆண்டு மார்ச் வரை, மாதம் தோறும், ஒரு சிலிண்டருக்கு நான்கு ரூபாய் வீதம் விலையை உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இச்செய்தி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இன்று காலை முதல் சமூக தளங்களில் மோடி அரசை விமர்சித்து மீம்கள் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கியது.
இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் கடுமையாக எதிரொலித்தது. மாநிலங்களவையில், எதிர்க்கட்சிகள் சிலிண்டர் மானியம் ரத்து என்ற முடிவுக்கு எதிராகக் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலியதுறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "சிலிண்டர் மானியம் முறைப்படுத்தப்படும் எனவும் மானியம் ரத்து செய்யப்படாது" என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், "சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது. யாருக்குத் தேவை தேவையில்லை என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது" என்றார்.