நிழலுலக தாதா தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானில் இருக்கலாம் அல்லது வேறு எங்கும் இருக்கலாம் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் தெரிவித்துள்ளார்.
மும்பையில், கடந்த 1993-ஆம் ஆண்டு 257 பேரின் உயிரைக் குடித்த, தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய தாவூத் இப்ராஹீம், கடந்த 1986-ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு சென்று விட்டார்.
பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வருபவரும், பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையதாக சர்வதேச போலீசார் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராஹீம், பாகிஸ்தானில் வசித்து வருவதாக கூறப்பட்டாலும், அந்நாட்டு அரசு அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தியா தரப்பில் பல்வேறு ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் அளிக்கப்பட்ட போதிலும், அந்நாட்டு அரசு அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.
ஐஎஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தடைக்கான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலிடம், தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானில் தான் உள்ளார் என்பதை குறிக்கும் 9 முகவரிகள் சேர்க்கப்பட்ட புதிய கோப்புகள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளிக்கப்பட்டது. அவை தாவூத் அடிக்கடி சென்று வரும் இடங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன் மீதான விசாரணை நடத்திய ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில், அந்த முகவரிகளில் 3 முகவரிகள் தவறானவை என குறிப்பிட்டது. அதேசமயம், மற்ற 6 முகவரிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாததால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், தாவூத் பாகிஸ்தானில் தான் உள்ளார் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் மறைமுகமாக உறுதி படுத்தியது.
இந்நிலையில், தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானில் இருக்கலாம் அல்லது வேறு எங்கும் இருக்கலாம் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் தெரிவித்துள்ளார். அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவுக்கு தாவூத் இப்ராஹீம் பதிலடி கொடுத்து வருகிறார். நீண்ட காலமாக பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இந்தியாவுக்கு ஏன் நாங்கள் உதவ வேண்டும். தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானில் இருக்கலாம். அல்லது வேறு எங்கும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃபின் இந்த பேட்டி பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.