பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை வருகிற டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரி செலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10 இலக்க எண் ஆகும். வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் கார்டு பெறலாம். பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம்.
இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதையடுத்து, வங்கிக் கணக்குகள், செல்போன் எண்கள், மத்திய அரசின் திட்டங்கள் என ஒன்றன் பின் ஒன்றாக ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். அப்படி இணைக்கவில்லையெனில் வருமான வரித் தாக்கல் ஏற்றுக் கொள்ளப்பட மட்டது என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனிடையே, கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடையவிருந்த வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதேபோல், ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவும் ஆகஸ்ட் 31-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பான் எண் - ஆதார் எண் இணைப்பது எப்படி?
இதற்கான அறிவிக்கையை கடந்த ஜூலை 31-ம் தேதியன்று வெளியிட்ட மத்திய நேரடி வரிகளுக்கான வாரியம், "ஆதார் கார்டு மற்றும் பான் கார்டில் உள்ள பெயர் வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் வருமான வரித் தாக்கல் செய்வோர் இரு எண்களையும் இணைக்க முடியவில்லை. இதனால், வந்த பல புகார்களையடுத்து, ஆதார் - பான் எண் இணைப்புக்கு மட்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது" எனவும் விளக்கம் அளித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, பலரும் தங்களது இரு எண்களையும் இணைத்து வந்தனர். ஆனால், சிலர் இணைக்க முடியாமல் தொழில்நுட்பம், பெயர் வேறுபாடு உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வந்தனர். ஆகஸ்ட் 5-ம் தேதியன்று வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் கூட, இரு எண்களையும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் இணைக்க முடியாத காரணத்தால், தங்களது வருமான வரித் தாக்கல் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை வருகிற டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வருமான வரித் தாக்கல் செய்வோரை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.
உங்களது பான் கார்டுக்கு "உயிர்" இருப்பதை உறுதி செய்வது எப்படி?
முன்னதாக, மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெற அவற்றுடன் ஆதார் எண்ணை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடுவும் வருகிற டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவும் வருகிற டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.