டெல்லியில் காற்றும் தரத்தின் குறியீடு 484 என்றளவில் அபாயகரமான நிலையை எட்டியதையடுத்து, மாசுபாட்டைக் குறைக்க டெல்லி அரசாங்கம் பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக, காற்று மாசுபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க ஒருவாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது டெல்லி அரசு.
மேலும், ஒற்றை இலக்க எண் கொண்ட கார்கள் ஒற்றை இலக்க தேதிகளிலும், இரட்டை இலக்க எண் கொண்ட கார்கள் இரட்டை இலக்க தேதிகளிலும் இயக்கும் 'கார் ரேஷனிங்' எனும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 13 (திங்கள் கிழமை) முதல் நவம்பர் 17 வரை என ஐந்து நாட்களுக்கு இத்திட்டத்தை முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை இந்த முறை செயல்படுத்தப்படும் என டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் அஷோக் கெல்லோட் தெரிவித்துள்ளார். ஏற்கனவே டெல்லியில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி-ஏப்ரல் வரை நான்கு மாதங்களுக்கு நடைமுறைபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும், இதனை பயன்படுத்தி தனியார் டாக்ஸி நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலிக்கக்கூடாது எனவும் அமைச்சர் அசோக் கெல்லோட் கேட்டுக்கொண்டுள்ளார். "டெல்லி மெட்ரோ 100 சிறிய பேருந்துகளை இயக்க உறுதி கூறியுள்ளனர். பள்ளிகள் தங்கள் பேருந்துகளில் மக்களையும் ஏற்றிக்கொள்ளலாம். ஆனால், இது கட்டாயமில்லை", எனவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், சி.என்.ஜி. வாகனங்கள், எலெக்ட்ரிக் கார், ஹைபிரிட் கார், பெண்கள் மட்டுமே செல்லும் கார், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், பள்ளி சீருடையில் இருக்கும் குழந்தைகளயும் ஏற்றிச்செல்லும் கார்களுக்கு இந்த நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.