தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் இன்று 'சிவியர்' என்ற அளவை எட்டியுள்ளது. டெல்லி மாநகர் முழுவதும் பனியால் மூடப்பட்டிருப்பது போல காற்று மாசு அடைந்து காணப்படுகிறது. இதனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி நகரை 'எரிவாயு அறை' என்று குறிப்பிட்டுள்ளார்.
"ஒவ்வொரு வருடமும், இந்த காலத்தில் டெல்லி இதுபோன்று மாசுபடுகிறது. இதற்கு நாம் ஒரு தீர்வை காண வேண்டும்" என முதல்வர் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் இதற்கு முன்னதாக காற்று மாசுபாட்டின் அளவு கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி 'சிவியர்' என்ற நிலையை எட்டியிருந்தது. தீபாவளி முடிந்த பிறகு இந்த நிலை ஏற்பட்டது. அதன்பிறகு, இன்று மீண்டும் அதே மோசமான தரத்திற்கு டெல்லியின் காற்று மாசுபட்டுள்ளது.
காற்றின் தரத்தை அளக்கும் 'ஏர் க்வாலிட்டி இன்டக்ஸ்' கிட்டத்தட்ட 400-யும் தாண்டி இருக்கிறது. இந்த அளவு 301-400 இருந்தாலே மிகவும் மோசமாக உள்ளது என்று அர்த்தம். 400-க்கு மேல் போனால் மிக சிவியரான நிலை என்று பொருள். இதனால், இன்று காலையிலிருந்து டெல்லியில் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, தலைநகரிலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்லும் 12 ரயில்களும் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/11/z716-300x217.jpg)
தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் உள்ள 19 மையங்களில், 12 மையங்களில் காற்று சுகாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. புகை பனி மூட்டம், காற்று மாசுபாடு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
அரியானாவில் அதிகாலையில் நீண்ட தொலைவு செல்லும் பஸ்களின் சேவையானது ரத்து செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர்கள் பள்ளிகளை ஒரு மணி நேரம் தாமதமாக திறக்க கேட்டுக் கொண்டு உள்ளனர். தேசிய நெடுஞ்சாலை 9-ல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. நீண்ட தொலைவு செல்லும் ரெயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பனிமூட்டம் காரணமாக தெளிவின்மை நிலை காணப்படுவதால் ரெயில்கள் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
டெல்லி விமான நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளது. தெளிவான வானிலையின்மை காரணமாக விமான ஓடுதளம் மூடப்பட்டது. சில விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.
சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டிருப்பதால், மெட்ரோ ரயில்களில் மேலும் சில பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். கூட்டம் அதிகமில்லாத நேரங்களில் டிக்கெட் விலையை குறைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், டெல்லியில் மோசமான வானிலை காரணமாக பள்ளிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அறிவிக்கவும் கல்வித்துறை அமைச்சர் மணிஷ் சிசோடியா அறிவுரை வழங்கி உள்ளார்.
மேலும், இந்திய மருத்துவச் சங்கம், வெளியிட்டுள்ள அறிக்கையில், "நகரத்தில் காற்று மாசு அபாயகரமான நிலையில் உள்ளது. வழக்கமாக உள்ளதைவிட காற்று மாசு 12-லிருந்து 19 மடங்குவரை அதிகரித்துள்ளது. எனவே, காலை வேளையில் பள்ளிகளில் நடைபெறும் வெளிப்புற நிகழ்ச்சிகளையும் விளையாட்டையும் அனுமதிக்க வேண்டாம்' என்று எச்சரித்துள்ளது.