தெற்கு டெல்லியில் உள்ள ‘மால்’ ஒன்றில், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குழந்தைகளை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிராவில் வறட்சி, விவசாயக் கடன் தொல்லை என கடந்த சில மாதங்களாக தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளுக்காக நடைபெற்று வரும் போராட்டத்தில் மகராஷ்டிராவில் தற்கொலைச் செய்துகொண்ட விவசாயிகளின் குழந்தைகளும் கலந்துகொண்டனர். இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட 40 குழந்தைகளுக்கும் கடந்த புதன்கிழமை ஐஸ்கிரீம் வாங்கித்தந்து அவர்களை மகிழ்விப்பதற்காக டெல்லியில் உள்ள ஒரு மாலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
”டெல்லியில் சில இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும் என அந்த குழந்தைகள் விரும்பினர். வெளியே வெயில் கொளுத்தியதால், சிறிது நேரம் அங்குள்ள மாலுக்கு சென்று ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்கலாம் என நினைத்து குழந்தைகளை மாலுக்கு அழைத்து சென்றோம். ஆனால், அவர்களை காவலர் நுழைவுவாயிலிலேயே நிறுத்திவிட்டனர். குழந்தைகள் அனைவரும், நேரு போன்று தொப்பி, பைஜாமா அணிந்திருந்ததால் அவர்கள் தடுத்துவிட்டனர்.”, என மால் நிர்வாகம் மீது ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் அனுபம் குற்றம்சாட்டுகிறார்.
மேலும், குழந்தைகளில் ஒருவருக்கு காலில் அடிபட்டிருந்ததால் அவனுக்காக டிராலி எடுத்தாகவும் அதைக்கூட மால் நிர்வாகம் தரவில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.
அதன்பிறகு, அங்குள்ள ஊடகவியலாளர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின் குழந்தைகள் மாலின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.