வேட்டி கட்டிய இயக்குனருக்கு மாலில் நுழைய தடை

வேட்டி அணிந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி கிடையாது என அந்த வணிக வளாக பாதுகாவலர்கள் கூறியுள்ளனர்.

வேட்டி அணிந்து வணிக வளாகத்துக்குள் சென்ற இயக்குனர் ஆஷிஷ் அவிகுந்தக்கிற்கு அந்த வணிக வளாகத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள “குவெஸ்ட் மால்” எனும் வணிக வளாகத்துக்கு தனது தோழியும், நடிகையுமான தேப்லீனா சென்னுடன் ஆஷிஷ் அவிகுந்தக் சென்றுள்ளார். அப்போது, மாலினுள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏன் அனுமதி இல்லை என்ற காரணத்தை அவர் வினவிய போது, வேட்டி அணிந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி கிடையாது என அந்த வணிக வளாக பாதுகாவலர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து, அவர் ஆங்கிலத்தில் உரையாடியதையடுத்து, மாலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த இயக்குனர், தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

அதில்,”கொல்கத்தாவின் புதிய காலனித்துவ கிளப்புகளில் அனுமதி மறுக்கப்படுவது ஒன்றும் புதியதல்ல. ஆனால், இன்றைய தினம் நான் வேட்டி அணிந்து சென்ற காரணத்தால் மாலுக்குள் நுழைய எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக நான் வேட்டி அணிந்து வருகிறேன். அனுமதி மறுப்புக்கு காரணம் கேட்டபோது, லுங்கி மற்றும் வேட்டி அணிந்து வருபவர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதிப்பது இல்லை என கூறுகிறார்கள். நான் ஆங்கிலத்தில் பேசி, நான் யார் என கூறியதும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது இந்த நகரத்திற்கு ஏற்பட்டுள்ள குறைபாடு. பொது இடங்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. வர்க்கத்தின் அடிப்படையில் பிரித்து வைக்கப்படும் கலாசாரம் தடையின்றி நடைமுறையில் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. வணிக வளாக ஊழியர்களின் செயலுக்கு கடும் கண்டங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு தரப்பினரும் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை வணிக வளாக ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,”மேலதிகாரியின் கருத்தை கேட்டு வர சென்ற பாதுகாவலர், இயக்குனரை சிறிது நேரம் காத்திருக்க சொல்லியுள்ளார். மொத்தமாக 20 நொடிகள் மட்டுமே அவர் காத்திருந்துள்ளார்” என தெரிவித்துள்ளனர்.

இயக்குனருடன் சென்ற நடிகை கூறும்போது, “வேட்டி அணிந்த காரணத்தால் ஆஷிஷ் அவிகுந்தக்கிற்கு வணிக வளாகத்தினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அவர் ஆங்கிலத்தில் பேசியதும் அனுமதி வழங்கப்பட்டது. இதனை எனது செல்போனில் நான் வீடியோ எடுத்தேன். ஆனால், வீடியோ எடுக்க விடாமல் வணிக வளாக அதிகாரிகள் என்னை தடுத்தனர். அவர்களது இனவெறி மனப்பான்மையை மறைக்க விரும்புவதை இது காட்டுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

×Close
×Close