ஜார்க்கண்ட் மாநிலத்தில், குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காததால், குடும்ப அட்டை ரத்தானதால், ஏழைக்குடும்பம் ஒன்றில் சுமார் 8 நாட்கள் ஒன்றுமே சாப்பிடாமல் பசியால் வாடிய 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம், சிம்தேகா மாவட்டத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த 11 வயது சிறுமி சந்தோஷி குமாரிதான் உயிரிழந்தவர். குடும்பத்தில் ஒருவருக்கும் நிலையான வருமானம் இல்லாத நிலையில், குடும்ப அட்டையின் மூலம் நியாய விலைக் கடையில் கிடைக்கும் உணவு பொருட்களை கொண்டு அன்றாட உணவு தேவையை பூர்த்தி செய்து வந்திருக்கின்றனர். சிறுமியின் தந்தை மனநலம் சரியில்லாதவர். அதனால், தாய் கொய்லா தேவி மற்றும் அவரது தங்கையும் சேர்ந்து புல் வெட்டும் தொழிலுக்கு செல்கின்றனர். அதன்மூலம், குடும்பத்திற்கு வாரத்திற்கு ரூ.80 முதல் ரூ.90 வரை வருமானம் கிடைக்கும். அதன்மூலமே வயிற்றைக்கழுவி வந்திருக்கிறகு அக்குடும்பம். சில சமயங்களில், சந்தோஷி குமாரியின் ஒரு வயது தம்பிக்கு அங்கன்வாடியில் கொடுக்கப்படும் உணவுகளை குடும்பமே பங்கிட்டு சாப்பிடும் அவல நிலையும் ஏற்படும்.
இந்நிலையில், அக்குடும்பத்தினர் தங்கள் குடும்ப நல அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காததால், கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு நியாய விலை கடையில் உணவு பொருட்கள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி பசியால் வாடிய சிறுமி சந்தோஷி குமாரி தன் தாயிடம் உணவு கேட்டிருக்கிறார். பசியால் துடிதுடித்திருக்கிறார். உடனேயே, அக்குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்கின்றனர். அப்போது, சிறுமி பசியால் இருப்பதாகவும், அவருக்கு உடனடியாக உணவு வழங்குமாறும் மருத்துவர் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், அக்குடும்பம் என்ன செய்யும். இரவு 10.30 மணியளவில் பசி கொடுமையால் சிறுமி சந்தோஷி உயிரிழந்தார்.
உயிரிழப்பதற்கு முன்பு 8 நாட்கள் வரை அச்சிறுமி சாப்பிடாமலேயே இருந்திருக்கிறார். பூஜை விடுமுறை காரணமாக, பள்ளியில் சத்துணவும் சாப்பிட முடியாமல் சந்தோஷி பல நாட்கள் பசியிலேயே வாடியிருக்கிறார்.
அச்சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து, NREGA Watch எனும் அரசு சாரா அமைப்பு விசாரணை நடத்தியது. மேலும், உண்மை கண்டறியும் குழுவும் இந்த மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. இதில், குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காததால் அக்குடும்பத்தினருக்கு, உள்ளூர் நியாய விலைக்கடை ஊழியர்கள் உணவுப்பொருட்கள் மறுத்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு அங்குள்ள பல குடும்பங்களுக்கும் குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காததால், உணவுபொருட்கள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இப்போது, சந்தோஷி குமாரி மலேரியாவால் உயிரிழந்ததாக அதிகாரிகள் சப்பைக்கட்டு கட்டுவதாக உள்ளூர் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், சிறுமிக்கு மலேரியா இருந்ததற்கான மருத்துவ ஆதாரங்களும் இதுவரை இல்லை.
கடந்த ஆகஸ்டு மாதம் 21-ஆம் தேதி, உள்ளூர் சமூக நல ஆர்வலர்கள் அந்த கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பொது விசாரணையில் எடுத்து கூறினர். அதேபோல், செப்டம்பர் ஒன்றாம் தேதி வட்டார வழங்கல் துறை அதிகாரியிடமும் புகார் அளித்துள்ளனர். அப்போது, சிறுமி சந்தோஷி குமாரியின் தாயின் ஆதார் அட்டை நகலை அளித்து, புதிய குடும்ப அட்டையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, இணையத்தள சேவையில் கோளாறு ஏற்பட்டிருந்ததால், குடும்ப அட்டையை புதுப்பித்து வழங்கப்படவில்லை என அதிகாரிகள் சாக்கு சொல்லியிருக்கின்றனர். இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் 25 சதவீத பயனாளிகளுக்கு குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காததால், அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உணவு பொருட்கள் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு இணைக்கப்படாத குடும்ப அட்டைகளுக்கு எவ்வித உணவுப்பொருட்களும் வழங்கப்படுவதில்லை.
மானிய விலையில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட எந்தவித மக்கள் நல திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என, உச்சநீதிமன்றம் பலமுறை மத்திய அரசுக்கு கடுமையாக எச்சரித்திருக்கிறது. ஆனால், மத்திய அரசு பல திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.