பாலியல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் அமைப்பான தேரா சச்சா சௌதான் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஹார்ட் டிஸ்க், பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
குர்மீத் ராம் ரஹீம் சிங் தன் இரு சிஷ்யைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில் உள்ள குர்மீத் சிங்கின் அமைப்பான தேரா சச்சா சௌதா தலைமை அலுவலகத்தில், ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், காவல் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். சோதனையை ஒளிப்பதிவு செய்ய 50 ஒளிப்பதிவாளர்களும் அலுவலகத்திற்குள் சென்றனர். இந்த அலுவலகம் 800 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
பதுகாப்பு கருதி, சோதனையின்போது வெடிகுண்டு நிபுணர்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த சோதனையில், கணினிகள், ஹார்ட் டிஸ்க், பணம், மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும், அந்த அலுவலகத்தில் உள்ள சில அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் சொகுசாக கட்டப்பட்ட இந்த அலுவலகத்தினுள், சர்வதேச பள்ளி, அங்காடிகள், மருத்துவமனை, மைதானம், வீடுகள், திரையரங்கம் ஆகிய எல்லாமும் உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அலுவலகத்தில், ‘குஃபா’ எனப்படும் குகை வடிவிலான பாதுகாக்கப்பட்ட அறையும் உள்ளது. அங்குதான் பக்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அறையிலும் சோதனை நடத்தப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.