பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான இந்த வழக்குகள் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், தண்டனை குறித்த விவரம் 28-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 36-ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கலவரம் குறித்த பொதுநல வழக்கில், சனிக்கிழமை பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசையும், மனோகர் லால் கத்தார் தலைமையிலான ஹரியானா அரசையும் சாடியுள்ளது.
இது தொடர்பான நீதிபதிகளர் கருத்து தெரிவிக்கும்போது, நாம் அனைவரும் வாழ்வது ஒரே நாடு தான் தவிர, ஒரு கட்சியை சார்ந்து இயங்கும் நாடு அல்ல. எனவே, அரசியல்வாதிகள் இதனை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பிரதமர் என்பவர் இந்திய நாட்டிற்காக தானே தவிர, பாஜக-விற்கானவர் அல்ல. மாநில முதலமைச்சர், மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் (சத்ய பால் ஜெயின்) ஆகியோர் பாஜக-வின் பதவியில் இருப்பவர்கள் அல்ல. இது மக்களுக்கான பதவி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என விமர்சித்தனர்.
மத்திய அரசானது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது போல தெரிகிறது. மத்திய அரசு தனது கடமையை தட்டிக்கழிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது. வாக்குவங்கியை மையமாக வைத்து மாநில அரசு செயல்படுவதாக விமர்சித்தனர்.
மாநிலத்தின் முதலமைச்சர் தான் உள்துறை அமைச்சராக இருக்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் கடந்த ஒரு வாரத்தில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கவலரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் வெளி ஊர்களில் இருந்து பஞ்சகுலாவிற்கு வந்து தங்கியுள்ளனர்.
அரசியல் தொடர்பான முடிவுகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அரசியல் ரீதியிலான முடிவுகளாகல், அரசு நிர்வாகம் முடக்கப்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதையடுத்து, பஞ்சாய் மற்றும் ஹரியானா மாநிலங்கள் வன்முறை தொடர்பான அறிக்கையையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.
இது தொடர்பான முந்தைய செய்திகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்…