”விமானங்களில் இந்தி நாளிதழ்கள் வழங்க வேண்டும்”: டி.ஜி.சி.ஏ. அறிவுறுத்தல்

”இந்தியில் இதழ்களை வழங்காமல் இருப்பது, அலுவல் மொழிகள் தொடர்பான இந்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரானது.”, என இணை பொது இயக்குநர் லலித் குப்தா குறிப்பிட்டார்.

விமானங்களில் இந்தி நாளிதழ்கள் மற்றும் இதழ்களையும் பயணிகளுக்கு வழங்க வேண்டும் என பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியது.

இதுதொடர்பாக, பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இணை பொது இயக்குநர் லலித் குப்தா விமான நிறுவனங்களுக்கு புதன் கிழமை வெளியிட்ட கடிதத்தில், ”விமானங்களில் ஆங்கிலம் போலவே இந்தி மொழியிலும் நாளிதழ்கள் மற்றும் இதழ்களை பயணிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால், அவ்வாறு இந்தியில் இதழ்களை வழங்காமல் இருப்பது, அலுவல் மொழிகள் தொடர்பான இந்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரானது.”, என குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பை நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர் கேலி செய்துள்ளார். “பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இப்போது சைவ உணவுகளுடன் சேர்த்து இந்தி மொழி பதிப்புகளையும் வழங்க விரும்புகிறது”, என சசிதரூர் இந்த அறிவிப்பு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, உள்ளூர் விமானங்களில் குறைந்த கட்டண பிரிவில் (எக்கானமி) பயணிக்கும் பயணிகளுக்கு சைவ உனவுகள் மட்டுமே வழங்கப்படும் என அண்மையில் அறிவித்தது. இதனால், உணவு பொருட்கள் வீணாவதையும், மிச்சமாவதையும் தவிர்த்து உணவின் தரத்தை உயர்த்த முடியும் எனவும், சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அசைவ உணவுகளை வழங்குதல் போன்ற சங்கடங்கள் ஏற்படாது எனவும் ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்தது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், தற்போது பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம், விமானங்களில் பயணிகளுக்கு இந்தி மொழி நாளிதழ்கள், இதழ்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியிருப்பது, இந்தி திணிப்பு நடவடிக்கையாக உள்ளது என சர்ச்சைகள் எழ ஆரம்பித்துள்ளன.

×Close
×Close