”அரசு மருத்துவமனைகளால் உயர்தர சிகிச்சை அளிக்க முடிவதில்லை”: தனியார் நிறுவனங்களை அழைக்கும் அமைச்சர் நிதின் கட்காரி

அரசு மருத்துவமனைகளில் நவீன மற்றும் காலத்திற்கு தகுந்த சேவையை அரசு செலவில் வழங்குவது கடினம் என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் நவீன மற்றும் காலத்திற்கு தகுந்த சேவையை அரசு செலவில் வழங்குவது கடினம் என, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையான பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், என்சஃபாலிடிஸ் எனப்படும் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 70 குழந்தைகள் 5 நாட்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தன. இதையடுத்து, அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் உருளைகள் வாங்குவதற்கான நிலுவைத்தொகையை செலுத்த மருத்துவமனை நிர்வாகம் தவறிவிட்டதாகவும், அவற்றை கண்காணிகாமல் மாநில அரசு அலட்சியம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சமீபத்தில் நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, அரசு மருத்துவமனைகளில் நவீன மற்றும் காலத்திற்கு தகுந்த சேவையை அரசு செலவில் வழங்குவது கடினம் எனவும், அரசு சுகாதார நிலையங்களில் அத்தகைய வசதிகளை ஏற்படுத்த தனியார் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

“மருத்துவம் சார்ந்த பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இல்லாமை, திறன்வாய்ந்த பணியாட்கள் இல்லாமை, போதிய நிதி இல்லாதது, விதிமுறைகள் இவற்றால், அரசு சுகாதார நிலையங்களில் தொழில்முறை சார்ந்த சிகிச்சை அளிக்க முடிவதில்லை. அதனால், தொழில்முனைவோர் மற்றும் சமூக நிறுவனங்கள் அரசு நிலங்களில் சுகாதார நிலையங்களை அமைத்து நடத்த முன்வந்தால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நவீன மற்றும் தொழில்முறை சார்ந்த சிகிச்சையை அளிக்க முடியும்.”, என அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

“மும்பை துறைமுக நிலத்தில் உள்ள 17 ஏக்கரில் இதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். அந்த நிலத்தை சமூக நிறுவனம் ஒன்றிற்கு குறைந்த வாடகையில் அளித்துள்ளோம். அந்நிறுவனம் உயர் சிறப்பு மருத்துவமனை அமைத்து, ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது.”, என அமைச்சர் தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close