புதுச்சேரியில் வருவாய் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்: நடவடிக்கை எடுக்க சுயேச்சை எம்.எல்.ஏ நேரு கோரிக்கை

புதுச்சேரி மாநிலத்தில், ஓ.பி.சி, எம்.பி.சி வகுப்பினர் அரசின் நலத்திட்டங்களைப் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு வருவாய் உச்சவரம்பு ரூபாய் 75,000 மட்டுமே. இந்தக் கட்டுப்பாடு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில், ஓ.பி.சி, எம்.பி.சி வகுப்பினர் அரசின் நலத்திட்டங்களைப் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு வருவாய் உச்சவரம்பு ரூபாய் 75,000 மட்டுமே. இந்தக் கட்டுப்பாடு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
puducherry

புதுச்சேரி மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பு ரூபாய் 75,000 க்குள் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நிலைமைக்கு இது போதுமானதாக இல்லை என்றும், இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியாமல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு உள்ளிட்டோர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Advertisment

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கான உதவி, குடிசை மாற்று வாரியத்தின் காமராஜர் கல் வீடு கட்டும் மானியம், ராஜீவ்காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டம் (மரண நிதியுதவி), திருமண உதவித்தொகை திட்டங்கள், கல்வி உதவித்தொகை (Scholarship) போன்ற பல முக்கியமான நிதியுதவித் திட்டங்களுக்கு ஓ.பி.சி. மற்றும் எம்.பி.சி. பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ. 75,000 ஐ தாண்டக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பொருளாதாரச் சூழலில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் மாதம் தலா ரூ. 10,000 சம்பாதித்தால்கூட, அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2,40,000/- ஆகிறது. இது நிர்ணயிக்கப்பட்ட ரூ. 75,000 உச்சவரம்பை விட மிக அதிகமாகும். 

தற்போதைய அத்தியாவசியச் செலவினங்களைக் கணக்கில் கொண்டால், ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தின் மாத வருமானம் ரூ. 25,000ஆக (ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/-) இருந்தாலும், அவர்களின் அடிப்படைச் செலவுகளாக வீட்டு வாடகை, வாகன எரிபொருள், மின்சார,குடிநீர் கட்டணம், உணவுத் தேவை, மாதத் தவணைகள் (EMI) போன்றவற்றுக்கே கிட்டத்தட்ட முழுமையான தொகையும் செலவாகிவிடுகிறது.

Advertisment
Advertisements

மருத்துவச் செலவுகள், பிள்ளைகளின் கல்விச் செலவுகள், ஆடைகள், பண்டிகைச் செலவுகள் போன்ற இதர அத்தியாவசிய செலவுகளுக்குப் பணம் இல்லாமல், இந்தக் குடும்பங்கள் கடன் சுமையில் திண்டாடுகின்றனர். இத்தகைய சூழலில், ரூ. 75,000 என்ற மிகக் குறைந்த வருமான உச்சவரம்பானது, தகுதியான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை நலத்திட்டங்களில் இருந்து புறக்கணிக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், புதுச்சேரி முதலமைச்சர் அவர்கள் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, புதுச்சேரியின் தனிநபர் வருமானம் ரூ. 3,00,000 ஆக உயர்ந்துள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்தக் கணக்கெடுப்பின்படி பார்த்தால், வறுமைக்கோட்டிற்கு கீழ் (BPL) யாரும் இல்லை என்ற நிலை உருவாகிறது. அரசின் அறிவித்த தனிநபர் வருமான விகிதாச்சாரத்தைக் கொண்டு பார்த்தால், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கான நலத்திட்டங்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என மக்கள் கருதுகின்றனர்.

மாறாக, ஆதிதிராவிடர் மக்கள் மற்றும் உயர்சாதி வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு (EWS பிரிவினருக்கு) அரசின் திட்டங்களில் பயன்பெற ஏதுவாக, வருவாய் உச்சவரம்பு ரூபாய் 8,00,000/- (எட்டு லட்சம்) வரை உயர்த்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும், ஒ.பி.சி. மற்றும் எம்.பி.சி. வகுப்பினருக்கு மட்டும் பழைய ரூ. 75,000 உச்சவரம்பு தொடர்வது பாரபட்சமானது என்றும், தற்போதைய பொருளாதார நிலைக்கு இது பொருந்தாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

விலைவாசி உயர்வு மற்றும் தனிநபர் வருமான உயர்வுக்கு ஏற்ப, ஒ.பி.சி. மற்றும் எம்.பி.சி. வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் வருவாய் உச்சவரம்பை, குறைந்தபட்சம் ரூ. 3,00,000 முதல் ரூ. 5,00,000  வரை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் அரசை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

மேலும், ராஜீவ்காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில், நிதி உதவியின் தொகையை உயர்த்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயற்கை மரணத்திற்கு தற்போது வழங்கப்படும் ரூ. 30,000/- தொகையை ரூ. 1,00,000/- ஆக உயர்த்த வேண்டும். விபத்தில் இறந்ததற்கு தற்போது வழங்கப்படும் ரூ. 1,00,000/- தொகையை ரூ. 2,00,000/- ஆக உயர்த்த வேண்டும்.

பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள சமூகங்களுக்கு உதவ உருவாக்கப்பட்ட அரசின் நலத்திட்டங்கள், காலாவதியான வருவாய் உச்சவரம்பு காரணமாகத் தகுதியான பயனாளிகளைச் சென்றடையாமல் தவிப்பதைத் தடுக்க, புதுச்சேரி அரசு இந்த நியாயமான கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

Biofuel Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: