இந்தி சின்னத்திரை நடிகை திவ்யங்கா திரிபாதி, பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதால், தான் பெண் குழந்தைப் பெற்றுக்கொள்ள அஞ்சுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வதுடன், இவ்வாறு பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கும் ஆண்களை பிரதமர் நரேந்திரமோடி சுத்தம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து, நடிகை திவ்யங்கா திரிபாதி, பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து பதிவிட்டதாவது, “சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வதுடன், இவ்வாறு பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கும் ஆண்களை பிரதமர் நரேந்திரமோடி சுத்தம் செய்ய வேண்டும்.”, என பதிவிட்டார். கடந்த 15-ஆம் தேதி சண்டிகரில் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மகள்களை கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திரமோடி உருவாக்கிய ‘மகள்கள் தினத்தின்’ வெற்றி குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். ”மகள்கள் தினம் என்றால் என்ன?
மகள்களை பாதுகாக்க வேண்டும். எனக்கு மகன் வேண்டும் என நான் ஆசை கொள்ளவில்லை.
ஆனால், எனக்கு பெண் குழந்தை பிறப்பது குறித்து நான் அச்சமடைகிறேன். நான் அவளுக்கு என்ன சொல்வது? நான் ஏன் அவளை சொர்க்கத்திலிருந்து நரகத்திற்கு தள்ள வேண்டும்?”, என நடிகை திவ்யங்கா திரிபாதி ட்விட்டரில் பதிவிட்டார்.
மேலும், சுதந்திர தின கொண்டாட்டங்களுக்குப் பிறகு, பெண்களுக்கான சுதந்திரத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டார். மேலும், பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என அவர் பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டார். அப்போதுதான், அவர்கள் பெண்களை தவறாக பார்க்க மாட்டார்கள் என திவ்யங்கா பதிவிட்டார்.