டோக்லாம் எல்லை பிரச்னையில் இந்தியாவை கிண்டலடிக்கும் வகையில் சர்ச்சையை கிளப்பும் இனவாத வீடியோ ஒன்றை சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான சின்குவா வெளியிட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையில், இந்தியா – சீனா – பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் இணைகின்றன. இந்த பகுதியில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டது.
சர்ச்சை நிலவி வரும் இந்த இடத்திற்கு பூடான் உரிமை கொண்டாடுகிறது. இதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. மேலும்,”சிக்கன்ஸ் நெக்” அல்லது “சிலிகுரி காரிடார்” எனப்படும் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை ஏனைய இந்தியாவுடன் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிலபரப்பை சீனா எளிதாக சென்றடைய இது வழி செய்யும் என்பதால் இந்தியா கவலை கொண்டுள்ளது.
இதனையடுத்து, சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. அங்கு ராணுவ வீரர்களை குவித்தது. பதிலுக்கு சீனாவும் தங்களது ராணுவத்தை அங்கு குவித்துள்ளது. இதனால், எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இந்த சூழலில் இந்தியா – சீனா இடையே போர் நடைபெற்று வருகிறது. அதில், சீன ராணுவம் தொடர்ந்து வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது என்ற பாணியில் தான் சீன நாட்டு ஊடகம் செயல்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெறவில்லை. இரு நாட்டு ஊடகங்களுக்கு இடையே தான் எழுத்துப் போர் நடைபெற்று வருகிறது. ஊடக நிறுவனங்களின் ஸ்டூடியோவிலும், சமூக வலைதளங்களிலும் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சீன நாட்டு அதிகாரப்பூர்வ ஊடகமான சின்குவா, இந்தியர்களை கிண்டலடிக்கும் வகையில், இனவாத வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சிரிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், எடுக்கப்பட்ட அந்த வீடியோ எரிச்சலூட்டும் வகையில் உள்ளது. மேலும், இனவாத அடிப்படையில் அமைந்துள்ள அந்த வீடியோ, சீன ஊடகங்களால் சிரிப்பை கூட வரவழைக்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
மோசமான கிராஃபிக்ஸ், ஒலிப்பதிவு என எக்கச்சக்க குறைகளுடன், இனவாதத்தை மட்டுமே மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அந்த வீடியோ, சுமார் 3 நிமிடம் 22 நொடிகள் வருகிறது. “இந்திய ராணுவத்தின் ஏழு பாவங்கள்” என்ற தலைப்பில் கடந்த வாரம் ஒரு வீடியோ பதிவை சின்குவா வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக,”இந்தியாவின் ஏழு பாவங்கள்: ஏழு பாவங்களை இந்தியா ஒப்புக் கொள்ள வேண்டிய நேரம் இது” என்ற தலைப்பில் தற்போது இந்த இனவாத வீடியோவை சின்குவா வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில்,”டோக்லாம் பிரச்னையில் தூங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவை அனைவரும் எழுப்ப முயல்கிறார்கள். ஆனால், தூங்குபவர்கள் போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது என சீனா தெளிவாக உணர்ந்துள்ளது” என அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கூறுகிறார்.
மேலும் அந்த வீடியோவில்,”இந்தியர்களை சித்தரிக்கும் விதமாக தலையில் தலைப்பாகை, தாடியுடன் சீக்கியர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் கலந்து கொள்கிறார். அவர், ‘டோக்லாம் விவகாரத்தில் அனைவரும் இந்தியாவை குறை கூறுகிறார்கள். ஆனால், எங்களை யாரும் குறை கூற முடியாது.ஏனெனில், நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன்” என கூறுகிறார். உடனே பின்னணியில் சிலர் சிரிப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் இந்தியா செய்த ஏழு பாவங்கள் என,”அத்துமீறி நுழைதல், இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறுதல், சர்வதேச சட்டத்தை மீறுதல், தெரிந்தே தவறு செய்தல்” உள்ளிட்டவைகள் அந்த வீடியோவில் பட்டியலிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, டோக்லாம் எங்களது பகுதி அல்ல என பூடான் ஏற்கனவே சீனாவிடம் தெரிவித்து விட்டதாக அந்த வீடியோ பதிவில் சின்குவா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#TheSpark: 7 Sins of India. It’s time for India to confess its SEVEN SINS. pic.twitter.com/vb9lQ40VPH
— China Xinhua News (@XHNews) 16 August 2017
சீனாவின் மூர்க்கத்தனமான இந்த இனவாத வீடியோ பதிவுக்கு இந்திய தரப்பில் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.