ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ஹரியானாவில் தொண்டு நிறுவனத்தால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் மாணவிகள் இணைந்து 1001 ராக்கி கயிறுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-க்கு அனுப்பியுள்ளனர்.
வட மாநிலங்களில் சகோதர - சகோதரி உறவை கொண்டாடும் விதமாக திங்கள் கிழமை ரக்ஷா பந்தன் தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி எனும் கயிற்றை கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்துவர்.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவத் பகுதியில் உள்ள மரோரா கிராமத்தை சேர்ந்த பெண்கள், ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு 1001 ராக்கி கயிறுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-க்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து இந்த கிராமத்தை தத்தெடுத்த ‘சுலப் சர்வதேச சமூக சேவை’ அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவிக்கையில், “இவ்வாறு அமெரிக்க அதிபருக்கு ராக்கி கயிறுகள் அனுப்புவதன் மூலம் இந்திய - அமெரிக்க உறவு மேலும் பலப்படும்.”, என தெரிவிக்கின்றனர்.
“மாணவிகள் 1001 ராக்கிகளில் டொனால் ட்ரம்பிற்காக அவரது புகைப்படத்துடன் இணைத்து தயாரித்துள்ளனர். அதேபோல், 501 ராக்கிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்காக தயாரித்துள்ளனர். இங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் அவர்களது தலைவர்களை தங்களது சகோதரர்களாகவே கருதுகின்றனர்.”, என என்.ஜி.ஓ. அமைப்பை சேர்ந்தவர்கள் கூறினர்.
"நான் 150 ராக்கிகளை மூன்று நாட்களில் ட்ரம்ப் அண்ணாவுக்காக தயாரித்தேன். அத்துடன், அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து எங்கள் கிராமத்திற்கு வர வேண்டும் என கடிதமும் எழுதியுள்ளேன்”, என ரேகா ராணி (வயது 15) கூறுகிறார்.
தயாரிக்கப்பட்ட ராக்கிகளை கடந்த 4-ஆம் தேதியே அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போதுதான், வரும் 7-ஆம் தேதி, திங்கள் கிழமை ரக்ஷா பந்தன் தினத்தன்று அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்பை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிராமத்தில் உள்ள கணவனை இழந்த பெண்கள், ரக்ஷா பந்தன் தினத்தன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது கையில் ராக்கி கட்ட வேண்டும் என ஆசை கொண்டுள்ளனர்.
இந்த கிராமத்தை தத்தெடுத்த ‘சுலப் சர்வதேச சமூக சேவை’ அமைப்பு அக்கிராமத்திற்கு டொனால்ட் ட்ரம்பின் பெயரை சூட்டியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கிராமத்தின் பெயரை மாற்றியது சட்டத்திற்கு புறம்பானது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து, பெயர் பலகைகளை அகற்றுமாறு என்.ஜி.ஓ.-வை வலியுறுத்தியது நினைவில் கொள்ளத்தக்கது.
அதன்பிறகு, டொனால் ட்ரம்பின் பெயரை குறிப்பிடும் வகையிலான பெயர் பலகைகள், பதாகைகளை என்.ஜி.ஓ. அமைப்பினர் அகற்றியதாக கூறப்படுகிறது.