நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இணையம் மூலம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனை தெலுங்கு திரையுலகினர் பயன்படுத்தியதாக வழக்கு தொடர்பாக நடிகர் ரவிதேஜாவிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தெலுங்கு திரைப்பட உலகில் போதைப்பொருட்கள் பழக்கம் கணிசமாக இருப்பதாக புகார் வந்ததையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர் கெல்வின் என்பவரை அண்மையில் கைது செய்தனர். மேலும், கெல்வின் ஐதராபாத்திற்கு போதைப்பொருட்கள் கடத்திவந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்ததாக கெல்வின் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, பீயூஸ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த பரபரப்பான போதைப்பொருள் புகார் சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜூ, ரவி தேஜா, அனந்த கிருஷ்ண நந்து, நடிகைகள் சார்மி, முமைத் கான், கலை இயக்குநர் சின்னா உள்ளிட்ட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதில், பூரி ஜெகன்நாத், ஷ்யாம் கே.நாயுடு, தருண், நவ்தீப், சுப்பராஜூ, கலை இயக்குநர் சின்னா, நடிகை சார்மி ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ரோன்னி என்பவர் ஐதராபாத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கடந்த 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள நடிகர் நடிகைகளின் முடி, ரத்தம், நகம் உள்ளிட்டவற்றையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் தடயவியல் ஆய்விற்காக சேகரித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடிகை சார்மி தொடர்ந்த மனுவில், அவரின் ரத்தம், முடி, நகம் ஆகியவற்றை அவரது விருப்பமின்றி பரிசோதிக்கக் கூடாது என ஐதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் சிக்கியுள்ள நடிகை முமைத் கான் சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் விசாரணைக்காக வியாழக்கிழமை ஆஜரானார். முன்னதாக, இவர் தெலுங்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருந்தார். ஆனால், இந்த வழக்கில் அவர் சிக்கியதால் நிகழ்ச்சியின் இடையிலேயே அவர் வெளியேற வேண்டியிருந்தது.
இந்நிலையில், நடிகர் ரவி தேஜாவும் வெள்ளிக்கிழமை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக நேரில் ஆஜரானார். அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மைக் கமிங்கா என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டனர். நாசாவில் பணிபுரிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என பலரும் இதில் அடக்கம். ’டார்க்நெட்’ என்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் தளத்தின் மூலம் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், வெளிநாடுகளில் இருந்து கொரியர் மூலமாக போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.