ஒடிஷாவில் 11 மாத ஆண் குழந்தையை தந்தையே 25,000 ரூபாய்க்காக விற்று, அதில், செல்ஃபோன் உள்ளிட்ட பொருட்களை வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒடிஷா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்தவர் பல்ராம் முகி. இவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பர்ஷா முகி அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஏழு வயதில் மகளும், 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், சோம்நாத் சேதி என்ற ஓய்வுபெற்ற அரசு ஓட்டுநரின் 24 வயது மகன் கடந்த 2012-ஆம் ஆண்டு இறந்துவிடவே, அவருடைய மனைவி மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு மீள முடியாமல் உள்ளார். இதனால், அத்தம்பதியினர் குழந்தை ஒன்றை தத்தெடுக்க முடிவெடுத்து தன் நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தனர்.
இந்நிலையில், பர்ஷா முகியின் சகோதரர் பாலியாவுக்கு இத்தம்பதிகளின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து, அவர் தன் சகோதரியின் 11 மாத ஆண் குழந்தையை விற்க சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாலியா தன் சகோதரியின் கணவர் பல்ராம் முகியிடம் பணத்தை காரணமாக காட்டி ஆசை வார்த்தைகள் கூறி குழந்தையை விற்க சம்மதம் வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதையடுத்து, பல்ராம் முகி தன்னுடைய 11 மாத ஆண் குழந்தையை அந்த வயதான தம்பதிகளுக்கு விற்று, அவர்களிடமிருந்து 25,000 ரூபாயை பெற்றுக்கொண்டனர். அந்த பணத்தில் 2,000 ரூபாய்க்கு செல்ஃபோன், 1,500 ரூபாய்க்கு தன் ஏழு வயது மகளுக்கு வெள்ளி கொலுசு, புடவை ஆகியவை வாங்கியதாகவும், மீதமுள்ள பணத்தில் மதுபாட்டில்கள் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
குழந்தையின் தாய் பர்ஷா முகி இதுகுறித்து கூறுகையில், ”குழந்தை விற்கப்பட்டபோது என் கணவர் மது அருந்தியிருந்தார். அதன் பின், இந்த குழந்தை முறையற்று பிறந்ததாக கூறி அதனை வேறொருவருக்கு விற்கப்போவதாக தெரிவித்தார். என்னை அவர் அடித்து தாக்கினார். என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக குழந்தையை எடுத்து 25,000 ரூபாய்க்கு விற்று, செல்ஃபோன், புடவை, வெள்ளி கொலுசு ஆகியவை வாங்கினார்.”, என தெரிவித்தார்.
இதனிடையே, குழந்தையை விற்கும்போது தன் மனைவியும் மது அருந்தியிருந்ததாகவும், அதனை பயன்படுத்திக் கொண்டு குழந்தையை கொண்டுபோய் விற்றுவிட்டதாகவும் பல்ராம் முகி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: மருத்துவமனை கட்டணம் செலுத்த ரூ.7,500-க்கு பிறந்த குழந்தையை விற்ற தம்பதியர்