டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர ஏபிவிபி(அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) மாணவர் கழக தலைவர் போலி சான்றிதழை பயன்படுத்தியது உறுதியானதைத் தொடர்ந்து அவர் ஏபிவிபியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவர் கழக தலைவர் போலி சான்றிதழ் :
சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் நடைப்பெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் ஆதரவு சங்கமான ஏபிவிபி தலைவர் அன்கிவ் பைசோயா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் அன்கிவ் பைசோயா 1744 வாக்குகள் வித்டியாசத்தில் வெற்றிபெற்று தலைவரானர்.
இந்நிலையில் அன்கிவ் பைசோயா, பிஏ தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ் காட்டி டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ இணைந்துள்ளதாக காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டினர்,இது குறித்து விளக்கம் கேட்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு தேசிய மாணவர் சங்கம் உடனடியாக கடிதம் ஒன்றை அனுப்பியது.
இந்த கடிதத்திற்கு பதிலளித்த திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அன்கிவ் பைசோயா என்ற பெயரில் எந்த மாணவரும் தங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்றும், சான்றிதழில் உள்ள வரிசை எண் தங்கள் குறிப்பேட்டில் இல்லையென்றும், அன்கிவ் பைசோயா சமர்ப்பித்துள்ள பிஏ படிப்பிற்கான சான்றிதழ் போலியானது என்றும் தெரிவித்தது.
அதே சமயத்தில் காங்கிரஸ் மாணவ அமைப்பினரின் இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த ஏபிவிபி, அன்கிவ் பைசோயாவின் சான்றிதழ்களை சரிபார்த்த பிறகே டெல்லி பல்கலைக்கழகம் அங்கு சேர அனுமதி அளித்துள்ளதாக விளக்கம் அளித்தது. டெல்லி பல்கலைக்கழகம் எந்த மாணவரின் சான்றிதழையும் சரிபார்க்க உரிமை உள்ளது என்று தெரிவித்தது.
இந்நிலையில் போலிச் சான்றிதழ் விவகாரத்தில் மாணவர் கழக தலைவர் சிக்கிக் கொண்ட செய்தி டெல்லியில் வைரலானது. அதன் பின்பு, டில்லி பல்கலை நிர்வாகம் இதுத்தொடர்பாக தீவிர விசாரணை நடத்த உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அங்கிவின் சான்றிதழ் போலியானது என உறுதி செய்தார்.
இதனைத்தொடர்ந்து, மாணவர் சங்க தலைவர், அன்கிவ் பைசோயாவை, பதவி விலகும்படி ஏபிவிபி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்கிவ் பைசோயா ஏபிவிபியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் தனது தலைவர் பதவியையும் ராஜினா செய்தார்.
இது குறித்து விசாரணை முடிவடைந்து அன்கிவ் பைசோயா குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும் வரை, மாணவர் சங்க தலைவர் பதவியில் அவர் வகிக்க முடியாது என்று ஏபிவிபி விளக்கம் அளித்துள்ளது.