குஜராத், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான 5 ஆண்டு பதவிக் காலம், வரும் ஜனவரி மாதத்துடன் முடிகிறது. கடந்த இரு வாரத்துக்கு முன்னர், இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை, தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 'குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல், டிசம்பர் 18-ம் தேதிக்கு முன் நடத்தி முடிக்கப்படும்" என்று அறிவித்தார்.
இந்தநிலையில், குஜராத் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி இன்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "குஜராத் சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதத்தோடு நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 18-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்" என்றார்.
மேலும், 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 9-ஆம் தேதி நடத்தப்படும்.
93 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்டத் தேர்தல் டிசம்பர் 14 ஆம் தேதி நடத்தப்படும்.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/z626-300x217.jpg)
வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.28 லட்சம் வரை தேர்தலுக்காக செலவு செய்து கொள்ளலாம் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட தேர்தலுக்கான தேதிகள் விவரம்:
முதற்கட்ட தேர்தலுக்கான கெசட் அறிவிப்பு வெளியாகும் தேதி - நவம்பர் 14, 2017
நாமினேஷன் தாக்கல் செய்ய இறுதி நாள் - நவம்பர் 21
நாமினேஷன்களை சரிபார்க்கும் தேதி - நவம்பர் 22
வேட்புமனுவை திரும்ப பெற கடைசி தேதி - நவம்பர் 24
தேர்தல் தேதி - டிசம்பர் 9
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேதிகள் விவரம்:
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான கெசட் அறிவிப்பு வெளியாகும் தேதி - நவம்பர் 20, 2017
நாமினேஷன் தாக்கல் செய்ய இறுதி நாள் - நவம்பர் 27
நாமினேஷன்களை சரிபார்க்கும் தேதி - நவம்பர் 28
வேட்புமனுவை திரும்ப பெற கடைசி தேதி - நவம்பர் 30
தேர்தல் தேதி - டிசம்பர் 14.
குஜராத் தேர்தல் பாதுகாப்புக்கு 7 பட்டாலியன்கள் துணை ராணுவப்படை ஈடுபடுத்தப்படுகிறது. டார்ஜி லிங், கலிம்பாங், ஜில் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்ட துணை ராணுவப் படையும், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீரில் முகாமிட்டுள்ள துணை ராணுவப் படையும் குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில், கடந்த 19 ஆண்டுகளாக பாஜக தான் ஆட்சி செய்து வருகிறது. 1998-ம் ஆண்டிலிருந்து இதுவரை குஜராத் பாஜகவின் கோட்டையாக திகழ்கிறது. நரேந்திர மோடி, அமித் ஷா, எல்.கே.அத்வானி உள்ளிட்ட குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே பாஜக-வின் முக்கிய தலைவர்களாக இருக்கிறார்கள். மத்தியிலும் பாஜக ஆட்சி தான். எனவே, குஜராத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் அந்தக் கட்சி மிகத் தீவிரமாக உள்ளது. அதற்காகவே, கடந்த 15 நாட்களில் இரண்டு தடவை குஜராத் சென்று, இரண்டு மிகப்பெரிய திட்டங்களைத் தொடக்கிவைத்துள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் இந்தத் தேர்தல் கவுரவப் பிரச்சனை. சொந்த மாநிலத்தில் சறுக்கல் ஏற்பட்டால், அது, அரசியலிலும், சொந்த கட்சியிலும் பிரச்னையை ஏற்படுத்தும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.
அதனால், பிரதமர் மோடி தலைமையில் பாஜக முழு மூச்சில் களம் இறங்கியுள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என, அக்கட்சி ஆட்சி நடத்தும் பல மாநில முதல்வர்களும் பிரச்சார களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். குஜராத்தில் மொத்தமுள்ள, 182 இடங்களில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயித்திருக்கிறார் அமித் ஷா.
இது ஒரு புறம் என்றால் மறுபுறம் காங்கிரஸும் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. குலாம் நபி ஆசாத், அகமது படேல், சச்சின் பைலட் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் குஜராத்தில் முகாமிட்டு பணியாற்றி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் பெற்ற வெற்றியை போல, குஜராத்திலும் வெற்றி பெறுவோம் என பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், டெல்லி, பிஹார் மாநில தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வியை காங்கிரஸ் நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த மாநிலங்களில், பாஜகவுக்கு மாற்று மற்ற கட்சிகள் தான். பிஹாரிலும், உத்தரப் பிரதேசத்திலும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால், குஜராத் தேர்தல் களம் வித்தியாசமானது. பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி நிலவும் மாநிலம். இங்கு வெற்றி பெறுவது பாஜவுக்கு கவுரவ பிரச்னை என்றே கருதப்படுகிறது. இதனால், தங்களது பலத்தை காங்கிரஸ் முன் உறுதிப்படுத்த பாஜக குஜராத்தில் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.