மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதால் வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது போன்ற வாக்கு இயந்திரங்களை பயன்படுத்துவதால் தேர்தலின் முடிவே மாறிவிடும் வாய்புகள் உள்ளன எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இது போன்ற குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதுவற்காக தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. தில்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசிய கட்சிகள் கலந்து கொண்டன. மேலும், மாநிலத்தால் அங்கீகரிக்கப்பட்ட 48 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 35 கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன.
இதனிடையே தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி பேசும்போது, இந்திய தேர்தல் ஆணையம் எந்தக் கட்சிக்கும் சாதகமாக செயல்படவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதற்கு சாத்தியம் இல்லை. முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டை முன்வைக்கும் கட்சிகளுக்கு அதை நிரூபணம் செய்ய தேர்தல் ஆணையம் வாய்ப்பளிக்கிறது.
விவிபிஏடி இயந்திரங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இனி வரும் தேர்தல்களில் விவிபிஏடி இயந்திரங்கள் கொண்டு தேர்தல் நடத்தப்படும். இதனை 2019-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்த ஒப்புகை சீட்டு அவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்று கூறினார்.
முன்னதாக, பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஆம் ஆத்மி கட்சி, மின்னணு வாக்குப் பதிவு முறையின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தது. மேலும், வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை விளக்குவதற்காகவே டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வது எப்படி என்பது குறித்து ஆம் ஆத்மியின் எம்எல்ஏ பரத்வாஜ் விவரித்தார். ஆனால், அது தொடர்பாக கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையம், ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியது மாதிரி இயந்திரமே தவிர, தேர்தல் ஆணையத்தினுடைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல என பதிலளித்தது.