மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள வெனா அணையில், 9 மாணவர்கள் உட்பட 11 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று படகில் பயணம் செய்தனர். அவர்கள் அமைதியாக பயணம் செய்தவரையில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால், ஆர்வ மிகுதியில், ஃபேஸ்புக் லைவை ஆன் செய்து, அதன் மூலம் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு செல்ஃபி எடுக்க முயன்ற போது, அனைவரும் ஒரே பக்கமாக செல்ல, நிலைதடுமாறிய படகு, தண்ணீரில் கவிழ்ந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர்கள் அலறியபடியே நீரில் விழுந்து மூழ்கினர்.
இதுகுறித்து போலீஸ் கூறும்போது, "படகில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இளைஞர்கள். 20 வயதினை நிரம்பியவர்கள். ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் ஈடுபட்ட அவர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல் படகின் ஒரு முனைக்கு வந்துவிட்டனர். இதனால், வெனா அணையின் நடுவில் இரவு ஏழு மணியளவில் படகு கவிழ்ந்தது" என்றனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் ஷைலேஷ் கூறுகையில், "அந்த அணையில் படகு சவாரி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த இளைஞர்கள் உள்ளூரைச் சேர்ந்த மீனவர் ஒருவரை சரிகட்டி, அவர் மூலம் படகு சவாரி செய்திருக்கின்றனர். அந்த படகு மிகச் சிறியது. இத்தனை பேர் அதில் பயணம் செய்திருக்கக் கூடாது. இருந்தாலும், படகு சீராக தான் சென்றிருக்கிறது. எப்போது அவர்கள் செல்ஃபி எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்களோ, அதன்பிறகு தான் படகு கவிழ்ந்து மூழ்கியிருக்கிறது" என்றார்.
இதுவரை படகை இயக்கிய இரண்டு பேரும், ஒரேயொரு இளைஞர் மட்டும் பிழைத்துள்ளனர். இவர்கள் நீந்தியே கரைக்கு வந்துவிட்டனர். மேலும் ஒரு மாணவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஏழு இளைஞர்களின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி, மீட்புக் குழுவினரால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படகு கவிழும் இரண்டு நொடிகளுக்கு முன்பு வரை, நாம் இறக்கப்போகிறோம் என்பது தெரியாமல், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சியில் திளைத்த இளைஞர்களின் நெஞ்சை பதபதவைக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
https://www.youtube.com/embed/Bn8Vl6TmNps