மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் இருப்பதாக வந்த புகார்களை அடுத்து, தேர்தல் ஆணையம் இன்று நேரடியாக அதனை இயக்கி செயல் விளக்கம் தரவுள்ளது. மேலும், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யார்வேண்டுமானாலும் ஹேக் செய்துவிட முடியும் என விவாதிக்கப்பட்டு வருவதால், அதனை நிரூபித்து காட்டுமாறு தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ், டெல்லி சட்டசபையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், ஓட்டளிக்கும் போது உள்ள கோளாறுகளை நேரடியாக விளக்கினார். இதற்கு பின்தான் பிரச்சனையே ஆரம்பித்தது. ஆனால், இந்த புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இருப்பினும், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 55 அரசியல் பிரதிநிதிகளிடம் இதுகுறித்து தேர்தல் ஆணையம் கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது. அதன்பிறகு பேட்டியளித்த தேர்தல் ஆணையம், ஒப்புகைச் சீட்டு வாக்குப்பதிவு இயந்திரம் (VVPAT), இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும் என்றது. மேலும், அந்த இயந்திரம் மூலம், தனது வாக்குச்சீட்டில் உள்ள நபருக்கு சரியாகத் தான் வாக்களித்தோமா என்பதை அனைவரும் அறிய முடியும் என்றது.
இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முடிந்தால் ஹேக் செய்யுங்கள், என்ற அரசியல் கட்சிகளுக்கான ஓப்பன் சேலஞ்ச் நிகழ்வு வருகின்ற ஜூன் 3-ம் தேதி முதல் தொடங்குகிறது.