குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை தேவையில்லை: தேர்தல் ஆணையம்

குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தல்களில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க தேவையில்லை என, வழக்கு ஒன்றின் விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அவர்களது தண்டனை காலம் மற்றும் தண்டனை காலம் முடிந்ததிலிருந்து ஆறு ஆண்டுகள் வரையிலும் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஆனால், குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையமும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு புதன் கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேவையில்லை எனவும், தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிடாமல் இருக்க சில நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பதிலளித்த தேர்தல் ஆணையம், குற்றவழக்கில் தண்டனை பெற்றவர்கள் மற்றும் ஒருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலே அவரையும் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்து கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னுக்குப் பின் முரணாக தேர்தல் ஆணையம் அளித்த இந்த பதிலால், இந்த வழக்கில் தெளிவான பதிலை தெரிவிக்க ஏன் இவ்வளவு கால தாமதம் எனவும், இதனை தெளிவுப்படுத்த தேர்தல் ஆணையம் தவிர்ப்பதாகவும், இம்மாதிரியான முக்கியமான வழக்கில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருப்பதாகவும் நீதிபதிகள் கடிந்துகொண்டனர்.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தெளிவான பதிலை தெரிவிக்காமல் கால தாமதம் செய்வதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

×Close
×Close