பாழடைந்த நிலையில் அரசு அலுவலகம்: ’ஹெல்மெட்’ அணிந்துகொண்டு பணிபுரியும் பணியாளர்கள்

பீகாரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளதால், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் ஹெல்மெட் அணிந்து வேலை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பணியாளர்கள் மட்டுமல்லாமல், அந்த அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக செல்லும் பொதுமக்களும் ஹெல்மெட் அணிந்து செல்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் கிழக்கு சம்பரன் பகுதியிலுள்ள அரசு அலுவலகத்தில் தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. மேற்கூரை, சுவர் எல்லாம் பெயர்ந்து விழுந்து கவலைக்கிடமான நிலைமையில் காட்சியளிக்கும் இந்தக் கட்டடத்தை அச்சத்துடனேயே கடந்து செல்கிறார்கள் மக்கள். பீகார் அரசின் கட்டுமான துறை இந்த கட்டடத்தை ஆபத்தான கட்டடம் என கடந்த 2016-ஆம் ஆண்டு அறிவித்தது. இருப்பினும், அங்குள்ள பணியாளர்கள் தங்கள் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் அங்கேயே வேலை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பணியாளர்கள் மட்டுமல்லாமல், தங்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பல்வேறு அரசு சேவைகளுக்காக அந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் ஹெல்மெட் அணிந்துகொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

அந்த அலுவலகத்தின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து பலமுறை பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், எப்போது அந்த கட்டடம் இடிந்துவிழுந்து நமக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்திலேயே அங்கு பணிபுரியும் பணியாளர்கள் வேலை செய்துவருகின்றனர். ஏற்கனவே மோசமான நிலைமையில் உள்ள இந்தக் கட்டடமானது மழைக்காலம் வந்தால் அதன் நிலைமையை கேட்கவே வேண்டாம்.

இருப்பினும், தங்களுக்கு வேறு வழியின்றி ஹெல்மெட் அணிந்து வேலை பார்க்கும் கட்டாயத்திற்கு பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அவர்களுடைய அலுவலகம் உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும், அதுவரை வேறிடத்திற்கு அலுவலகத்தை மாற்ற வேண்டும் எனவும் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

×Close
×Close