ஹரித்துவார் அருகே என்ஜினியர் சுடப்பட்டார் : சென்னை எல் அண்ட் டியில் வேலை பார்த்தவர்

எதிரில் பைக்கில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆதித்யா குமாரின் தலையில் சுட்டனர்.

சென்னையில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தில் வேலை பார்த்த என்ஜினியர் மோட்டார் சைக்கிளில் ஹரித்துவார் சென்ற போது சுடப்பட்டார்.

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா குமார் (31). இவரது மனைவி விஜயலட்சுமி (26). ஆதித்யா குமார் நந்தம்பாக்கத்தில் உள்ள எல்&டி கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பணி காரணமாக வளசரவாக்கத்தை அடுத்த ராயலாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3-ம்தேதி ஆதித்யா குமார் மனைவியுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கிருந்து மனைவியை அழைத்து கொண்டு பைக்கில் ஹரித்துவார் சென்றார். இவருடன் நண்பர் ஷியாம் தேஜா என்பவரும் மற்றொரு பைக்கில் சென்றார். நேற்று அங்கு சென்று கொண்டிருக்கும்போது எதிரில் பைக்கில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆதித்யா குமாரின் தலையில் சுட்டனர். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதனை துளைத்து உள்ளே சென்று தாக்கியது.

இதில் நிலை தடுமாறி அவர் மனைவியுடன் கீழே விழுந்தார். மனைவி விஜயலட்சுமிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அவரது நண்பர் ஷியாம் தேஜா விரைந்து வந்தார். அதற்குள் துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பி விட்டனர்.

உடனடியாக ஆதித்யா குமார், விஜயலட்சுமி ஆகியோரை மீரட்டில் உள்ள ஆனந்தம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முசாபர் நகரில் உள்ள நாய் மண்டி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மே மாதம் தான் ஆதித்யா குமாரும் விஜயலட்சுமி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆதித்யா குமார் எல்&டி நிறுவனத்தில் உள்ள கிரிக்கெட் அணியில் வீரராக உள்ளார். இன்று இவர்கள் விமானம் மூலமாக சென்னைக்கு வர விமான டிக்கெட்பதிவு செய்து வைத்திருந்தனர். மேலும் இந்த அணியில் கிரிக்கெட் போட்டியும் இன்று நடைபெற உள்ளது. இந்த சம்பவம் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எதற்காக இவர் சுடப்பட்டார்? என்ன காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள்மாறாட்டம் காரணமாக ஆதித்யா குமார் மீது தவறுதலாக சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close