நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு : மத்திய அரசின் 3 அமைச்சகம் ஒப்புதல்

நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசர சட்ட மசோதாவை சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்திருந்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவுக்கு மத்திய அரசின் 3 அமைச்சகங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது, அதனையடுத்து, நாடு முழுவதும் நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது.

அப்போது பின்பற்றப்பட கடுமையான நிபந்தனைகளால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அதே போல, இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு.

இதனையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை உள் ஒதுக்கீடாக ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்கனை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் தர்னீஷ்குமார், சாய் சச்சின் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனால், ஜூலை 17-ம் தேதி நடைபெறவிருந்த கலந்தாய்வும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசர சட்ட மசோதாவை சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்திருந்தார். உள்துறை அமைச்சகம் உரிய திருத்தங்களை பெற்று சேர்த்தபிறகு, சுகாதார அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஆகஸ்ட் 16 (இன்று) மாலையில்  ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சுகாதாரத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்களும் தாமதமின்றி ஒப்புதல் கொடுத்தன. இனி  சட்டவரைவு உள்துறை அமைச்சகம் மூலமாக குடிரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் தெரிகிறது.

முன்னதாக, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கலாம் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியிருந்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close