வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: பாஜக -வுக்கு ஆதரவாக பதிவான வாக்குகள்

மாவட்ட பஞ்சாயத்து தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் விழுந்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் விழுந்துள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட அந்து மாநிலத் தேர்தல்களிலும் இப்பிரச்னை எதிரொலித்தது. தேர்தல் முடிவைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடைபெறுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வந்தது. இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ஆணித்தரமாக மறுத்து வந்தது. இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு வந்தது. இதையடுத்து, மின்னணு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற முடியாது என சவால் விடும் அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தையும் தேர்தல் ஆணையம் நடத்தியது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தேர்தலின் போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் விழுந்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அனில் கல்காலி மூலம் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பிராந்தியதுக்குட்பட்ட புல்தானா மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி நடைபெற்றுள்ளது. அதில், சுயேச்சை வேட்பாளர் ஆஷாதய் அருண் சோர் என்பவருக்கு தேங்காய் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று சுல்தான்பூர் பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, தேங்காய் சின்னத்துக்கு வாக்களிக்கும் போது, பாஜக வேட்பாளரின் சின்னத்தில் விளக்கு எரிந்துள்ளது.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி அறிக்கையும் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், ஆஷாதய் அருண் சோர் புகார் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அனில் கல்காலி விவரம் கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மாவட்ட நிர்வாகம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், அருண் சோர் இருமுறை புகார் தெரிவித்துள்ளார். முதல் முறை அது நிராகரிக்கப்பட்டது. இரண்டாவது முறை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோளாறுகுள்ளான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சீல் வைக்கப்பட்டு அப்பகுதிக்கு பிப்ரவரி 21-ம் தேதியன்று மறு வாக்குபதிவு நடத்தப்பட்டுள்ளது எனவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

அதேசமயம், வேண்டுமென்றே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அப்படியே இருந்தாலும் அனைத்து பகுதிகளிலும் புகார் வந்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட ஒரு இயந்திரத்தில் மட்டுமே இது போன்று நடைபெற்றுள்ளது. அதற்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் எனவும் மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

×Close
×Close