முன்னுதாரணம்: நாகா பழங்குடியின் முதல் பெண் விமானிக்கு குவியும் பாராட்டுகள்

பெண்களை படிக்க வைக்கவே தயங்குகின்ற நாகா பழங்குடி இனத்திலிருந்து, பெண் ஒருவர் முதன்முறையாக விமானி ஆகியிருக்கிறார் என்பது மகிழ்ச்சி செய்தி.

பெண்கள் தங்களது கனவுகளை அடைய ஆண்களை விட நிச்சயம் போராட வேண்டி உள்ளது. அதற்காக பல படிகளை தாண்ட வேண்டும். பெண்கள், அவர்கள் சார்ந்த சமூகம், இனம் இவற்றின் காரணங்களாலும், அவர்களது இலக்கை அடைவதற்கு பல தடைகளை தாண்ட வேண்டும் என்பதை நாம் பல உதாரணங்களில் பார்த்திருக்கிறோம். அப்படி, ஆணாதிக்க பழக்கவழக்கங்கள், பெண்களை படிக்க வைக்கவே தயங்குகின்ற நாகா பழங்குடி இனத்திலிருந்து, பெண் ஒருவர் முதன்முறையாக விமானி ஆகியிருக்கிறார் என்பது உண்மையிலேயே பாராட்டுதலுக்குரிய செய்தி தான்.

மணிப்பூர் மாநிலம் சனாபதி மாவட்டத்தை சேர்ந்த பௌமை நாகா பழங்குடியின பெண்ணான ரோவினை பௌமை (Roveinai Poumai) தான் இந்த பாராட்டுக்குரியவர். நாகா பழங்குடியினர்கள் பெரும்பாலானோர் பரம்பரை பரம்பரையாக ஆணாதிக்க பழக்கவழக்கங்களை இன்றுவரை கடைபிடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம், வட கிழக்கு மாநிலங்களில் பதற்றமான நிலைமையிலும் இவர் தன் கனவை நோக்கி முன்னேறிக் கொண்டே இருந்திருக்கிறார். அப்படியிருக்கையில், பல கஷ்டங்களையும், சிரமங்களையும் தாண்டி அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் னியூ சௌத் வேல்ஸில் உள்ள பேசியர் விமானப் போக்குவரத்து கல்லூரியில் விமானிக்கான பட்டப்படிப்பை முடித்தார் ரோவினை. பௌமை நாகா இனத்திலிருந்து விமானிக்கான லைசென்ஸ் வைத்திருக்கும் முதல் நபர் என்ற பெருமையும் இவரையே சேரும். தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமானியாக பணிபுரியும் அளவுக்கு இவரது கடின உழைப்பு இவரை கொண்டு போய் சேர்த்திருக்கிறது.

நாகா பழங்குடியினத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய பெண்களுக்கும் இவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இவற்றையும் படியுங்கள்: ஆங்கிலம் தெரியாது, ஆனால், போயிங் 777 விமானத்தை இயக்கிய இளம்பெண் இவர்தான்

உலகம் சுற்றவிருக்கும் முதல் பெண்கள் கடற்படைக் குழு

×Close
×Close