Advertisment

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு : லாலுபிரசாத் குற்றவாளி என உத்தரவு, ஜனவரி 3-ல் தண்டனை அறிவிப்பு

மாட்டுத் தீவன வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவின் அரசியல் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. அந்த வழக்கு தீர்ப்பு நிலவரம் இன்று...

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fodder scam verdict Live Updates

Fodder scam verdict Live Updates

மாட்டுத் தீவன வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவின் அரசியல் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. அந்த வழக்கு தீர்ப்பு நிலவரம் ...

Advertisment

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு, இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்ட ஒரு வழக்கு! பீகார் முதல்வராக லாலுபிரசாத் யாதவ் இருந்த 1991-1994 காலகட்டத்தில் அரசு கால்நடைப் பண்ணைகளுக்கு மாட்டுத் தீவனம் வாங்கியதில் அரசு கஜானாவுக்கு 89 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலுபிரசாத் தவிர, பீகார் முன்னாள் முதல்வர் ஜெகனாத் மிஸ்ரா மற்றும் 19 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இன்று (டிசம்பர் 23) ராஞ்சியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தனது உத்தரவை வழங்க இருக்கிறது.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு LIVE UPDATES:

மாலை 4.05 : பீகார் துணை முதல்வர் சுசில்குமார் மோடி, ‘இது எதிர்பார்த்த தீர்ப்பு’ என கருத்து தெரிவித்தார்.

மாலை 3.51 : லாலுபிரசாத் மீதான 6 வழக்குகளில் ஒரு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தரப்பு, ‘மேல் முறையீட்டில் லாலு வெற்றி பெறுவார்’ என குறிப்பிட்டது.

மாலை 3.45 : லாலுபிரசாத் யாதவ் உள்பட 15 பேர் குற்றவாளிகள் என நீதிபதி உத்தரவிட்டார்.  பீகாரின் மற்றொரு முன்னாள் முதல்வரான ஜெகனாத் மிஸ்ரா உள்பட 7 பேர் நிரபராதிகள் என தீர்ப்பு கூறப்பட்டது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. தண்டனை விவரம் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மாலை 3.30 : மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுபிரசாத் யாதவ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து தகவல்கள் பரவின. ஆனால் அது நிஜமல்ல என பின்னர் தெரிய வந்தது.

மாலை 3.10 : நீதிமன்றத்திற்கு வெளியே பெரிய அளவில் கூட்டம் திரண்டிருக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மாலை 3.00 : எந்த நேரமும் தீர்ப்பு வெளியாகலாம். தீர்ப்பு வழங்குவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன.

பிற்பகல் 2.45 : லாலுபிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வியுடன் தனி நீதிமன்றம் வந்தார். சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும்.

 

பிற்பகல் 1.10 : லாலு குடும்பத்திற்கு இன்னொரு துயரமாக அவரது மகள் மிசா பார்தி மீதான பண பரிமாற்ற வழக்கில் டெல்லி தனி நீதிமன்றத்தில் இன்று அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. தனது தந்தை ராஞ்சி நீதிமன்றம் வந்திருந்த வேளையில் மிசா பார்தி டெல்லி நீதிமன்றத்தில் போய் நின்றார்.

பகல் 11.40 : தீர்ப்பு மாலை 3 மணிக்கு வழங்கப்பட இருப்பதாக லாலுபிரசாத் யாதவ்-வின் வழக்கறிஞர் பிரபாத் குமார் தெரிவித்தார்.

காலை 10.40 : லாலுபிரசாத் கூறுகையில், ‘எனக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தீர்ப்பு என்னவாக இருந்தாலும், பீகாரில் சட்டம்-ஒழுங்கை பேணும்படி பீகார் மக்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

காலை 10.15 : லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்தார். ‘2ஜி-யிலும் ஆதர்ஷ் விவகாரத்திலும் பாஜக.வின் பிரசாரம் உடைந்து நொறுங்கியது போலவே இதிலும் நடக்கும்’ என்றார் அவர்.

காலை 9.50 : குற்றம்சாட்டப்பட்டவர்களில் பீகார் முன்னாள் அமைச்சர் வித்ய சாகர் நிஷாத், பொதுக்கணக்கு குழு முன்னாள் தலைவர் ஜெகதீஷ் சர்மா மற்றும் துருவ் பகத் ஆகியோரும் முக்கியமானவர்கள். இந்த வழக்கில் 38 பேர் மீது 1997 அக்டோபர் 27-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

காலை 9.45 : லாலுபிரசாத் யாதவ், தனது இளைய மகன் தேஜஸ்வி யாதவுடன் வெள்ளிக்கிழமை ராஞ்சி வந்துவிட்டார். சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ் பால் சிங் முன்பு குற்றம்சாட்டப்பட்ட இதர நபர்களுடன் அவர் ஆஜராகிறார். இரு முன்னாள் முதல்வர்கள் தவிர, முன்னாள் எம்.பி. ஆர்.கே.ரானா, 3 முன்னாள் ஐஏ.எஸ். அதிகாரிகளான பூல்சந்த் சிங், பெக் ஜூலியஸ், மகேஷ் பிரசாத் உள்ளிட்ட 22 பே ஆஜர் ஆகிறார்கள்.

 

 

Fodder Scam Lalu Prasad Yadav Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment