நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியை சோலார் பேனல் மோசடி புகார் குறித்த விசாரணை அறிக்கையை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார்.
கேரளாவில் தனியார் நிறுவனனங்கள் மற்றும் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் விற்பனை செய்துவந்த தொழிலதிபர் சரிதா நாயர், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2013-ம் ஆண்டு புகார் எழுந்தது. இதில், அப்போதைய முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும அவரது அகுவலக அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, உம்மன் சாண்டி ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார்.
இதனிடையே, கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி இழந்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், 1073 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை சிவராஜன் கடந்த மாதம் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார். அந்த விசாரணை அறிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
முன்னாள் முதலமைச்சர் உம்மான் சாண்டி மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள், சோலார் பேனல் விற்பனையில் பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபடுவதற்கு உடந்தையாக இருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்காக, முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் ரூ.2.16 கோடி லஞ்சமாக பெற்றதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அப்போதைய உள்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன், இந்த முறைகேட்டிலிருந்து உம்மன் சாண்டியை தப்பிக்க வைக்க உதவியதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், அப்போதைய மின்துறை அமைச்சர் ஆர்யாதன் முஹம்மதுவும் லஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உம்மண் சாண்டி உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்களான எர்ணாகுளம் எம்.எல்.ஏ.ஹிபி ஏடன், ஆர்யாதன் முஹம்மது, அடூர் பிரகாஷ், ஜோஸ் கே.மணி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர், சரிதா நாயரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த பாலியல் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என, முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, ஏடிஜிபி ராஜேஷ் தேவன் தலைமையில் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகார்களை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.
இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது, காங்கிரஸ் கட்சியினர் அமலியில் ஈடுபட்டனர். அதனிடையேயும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பின்பு, அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.