மும்பையில் பள்ளியில் 4 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, அப்பள்ளியின் அலுவலக உதவியாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து, காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது, மஹராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தில் உள்ள மலாத் பகுதியில் பள்ளியொன்றில் 4 வயது சிறுமியை, கடந்த வாரம் அப்பள்ளியில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், தொடர்ச்சியாக முன்று நாட்கள் சிறுமியிடம் அவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தன் மகளின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்ததையடுத்து அவரது தாயார் சிறுமியிடம் விசாரித்தார். அப்போது, நடந்த சம்பவங்களை சிறுமி தன் தாயிடம் கூறினார்.
இதையடுத்து, கடந்த 5-ஆம் தேதி சிறுமியின் தாய் இதுகுறித்து திந்தோஷி பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
இதன்பின், குற்றம்சாட்டப்பட்ட பள்ளி அலுவலக உதவியாளரை காவல் துறையினர் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் நிறுத்தினர். அவரை வரும் 11-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், அப்பள்ளி வளாகத்தின் முன்பு செவ்வாய் கிழமை மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் பெற்றோர்களை சமாதனப்படுத்தினர். மேலும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.