வாழ்க்கை நம்மை எந்த போக்கில் அழைத்துச் செல்லும் என யாருக்கும் தெரியாது. ஒரு நிமிடம், ஏன், ஒரு நொடியில் கூட நம் வாழ்க்கை வேறொரு பாதையில் கொண்டு போய் சேர்த்துவிடும். யாரும் எதிர்பாராத நிகழ்வுகள் அரங்கேறும். அப்படித்தான், ஐதராபாத் நகரை சேர்ந்த கிரண் கனோஜியாவுக்கு சற்றும் எதிர்பாராத விபத்து ஒன்று கடந்த 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கிரண் கனோஜியா, கடந்த 2011-ஆம் ஆண்டு தன் பிறந்தநாளைக் கொண்டாட ரயிலில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார். அப்போது நடந்த நிகழ்வுதான் ஒரு நொடியில் அவரது வாழ்வையே புரட்டிப் போட்டது. ரயிலில் அருகிலிருந்த இருவர் அவரது, கைப்பயை பிடுங்கிக்கொண்டு ரயிலிலிருந்தே கிரணை தள்ளிவிட்டு தப்பித்தோடினர்.
பிறகு மருத்துவமனையில் தான் கண் விழித்தார் கிரண் கனோஜியா. அப்போது தன் இடது காலில் முழங்காலுக்குக் கீழ் ஒன்றுமே இல்லாததை உணர்ந்தார். அப்போது தான், தன் முழங்கால் வெட்டப்பட்டு இருந்தது கிரணுக்கு தெரிந்தது. ஆனால், அதே இடத்தில் கிரண் நின்றுவிடவில்லை. தொடர்ந்து முன்னேற வேண்டும் என தன்னம்பிக்கையுடன் இருந்தார். இப்போது கிரண் யார் தெரியுமா? செயற்கை கால்களுடன் தடகள போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் வீராங்கனை.
விபத்துக்குப் பின் செயற்கை கால் பொருத்திக் கொண்டார். தற்போது 28 வயதாகும் கிரண், முதன்முறையாக 2014-ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஏர்டெல் மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றார். இப்போது, மும்பை, டெல்லியில் பல்வேறு மாரத்தான்களை கொடியசைத்து துவங்கி வைக்கும் அளவுக்கு நட்சத்திர தடகள வீராங்கனையாகிவிட்டார். விரைவில் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது தான் கிரணின் லட்சியம்.
வாழ்க்கையில் நாம் எந்த தவறும் செய்யாமல், நமக்கு நேரும் துன்பங்களுக்கும், விபத்துகளுக்கும் துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டே இருந்தால், நாம்தான் ஹீரோ என்பதை தன் சாதனை மூலம் புரிய வைத்திருக்கிறார் கிரண்.