இணையத்தில் பாலியல் தொழில்: இளைஞர்களைக் கவர்ந்து பணம் பறித்த கும்பல் கைது

பெண்களின் பாலியல் தேவையை நிறைவேற்றுவதற்காக ஆண்கள் பலரை இணையம் மூலம் கவர்ந்து பெரும் தொகையை கறந்துவிட்டு ஏமாற்றியதாக, 5 பேரை காவல் துறையினர் கைது...

உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தில், பெண்களின் பாலியல் தேவையை நிறைவேற்றுவதற்காக ஆண்கள் பலரை இணையம் மூலம் கவர்ந்து அவர்களிடம் இருந்து பெரும் தொகையை கறந்துவிட்டு ஏமாற்றியதாக, 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து, காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது, இந்த தொழிலுக்கு தமிழ்நாடு, கேரளா, கிழக்கு உத்தரபிரதேசம் ஆகிய பகுதிளில் இருந்து பெரும்பாலான இளைஞர்கள் இணையத்தில் விண்ணப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது.

கைதான 5 பேரில் ஒருவரான ஆஷூ சௌத்ரி என்பவர் காஸியாபாத்தின் சாஸ்திரி நகரில் கால் சென்டர் நடத்தி வந்தது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. ஆஷூ சௌத்ரி பி.பி.ஏ. பட்டதாரி. இவர்தான் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வருடங்களுக்கு முன் ராஜஸ்தானுக்கு சென்ற இவர், இதுகுறித்த சில ஏமாற்று வேலைகளை தெரிந்துகொள்ள ஒருவருக்கு 50,000 ரூபாய் தந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

ஹிமான்சு சரண், ஹர்ஷ் சௌத்ரி, விராத் சௌத்ரி, மோஹித் சௌத்ரி ஆகிய 4 பேருடன் ஆஷூ சௌத்ரி இணைந்து பல இளைஞர்களை ஏமாற்றியதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்காக, இளைஞர்கள் விண்ணப்பிக்க ரகசிய புக்கிங் இணையத்தளத்தையும் அந்த கும்பல் நிர்வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

”இம்மாதிரி 1000 கணக்கிலான இளைஞர்களிடமிருந்து பணம் பிடுங்கி ஏமாற்றியுள்ளனர். அவர்கள் கூறும் பணத்தொகையை அந்த இளைஞர்கள் இணையம் மூலமாக செலுத்தியவுடன் அவர்களை கவர்வதற்காக சில பெண்களின் புகைப்படத்தை அனுப்புகின்றனர். இந்த பெண்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்படுகின்றன”, என காவல் துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர் கூறினார்.

அதன்பிறகு விண்ணப்பித்தவர்களுடனான தொடர்பை அந்த கும்பல் துண்டித்து விடுகிறது. இந்த தொழிலுக்கு விண்ணப்பிக்க 10,000 முதல் 15,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கிக்கணக்கை முடக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடைய லேப்டாப், மொபைல், ஏடிஎம் கார்டு, பல்வேறு நிறுவன சிம் கார்டுகள் ஆகியவையும் அந்த கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கும்பல் பெண்கள் குழு ஏதாவதுடன் இணைந்து இதனை அரங்கேற்றி வருகிறதா என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கைதான 5 பேரின் மீதும் மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்ப குற்றங்களின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த கும்பலிடமிருந்து ஏமாந்த இளைஞர்கள் பலர் சைபர் கிரைம் காவல் துறை பிரிவுக்கு புகார் அனுப்பி வருகின்றனர்.

×Close
×Close