லங்கேஷ் பத்திரிக்கையின் ஆசிரியரும், தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ், செவ்வாய் கிழமை சுமார் 8 மணியளவில், பெங்களூருவில் உள்ள தன் வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்க கவுரி லங்கேஷ் எப்போதும் தயங்கியதில்லை. லங்கேஷ் பத்திரிக்கை மூலம் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக குரலை உயர்த்தினார் கவுரி லங்கேஷ்.
கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மாநாட்டில், “கர்நாடகா முற்போக்கான, மதச்சார்பற்ற மாநிலத்திலிருந்து மதவாத மாநிலமாக மாறி வந்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது. மார்க்ஸ்-க்கு முன்பே கர்நாடகாவில் 12-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் மரியாதை, சமத்துவம், பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு ஆகியவற்றை பேசிய பசவன்னா இருந்திருக்கிறார். ஆனால், இப்போது பசவன்னாவை பின்பற்றுகிறோம் என கூறுபவர்கள் எல்லாம் பாஜக ஆட்களாக இருக்கின்றனர். இது பசவன்னா எதற்கு எதிர்த்து நின்றாரோ அதற்கே முரண்பாடாக உள்ளது.”, என கூறினார்.
மேலும், கொலை மிரட்டல்கள் கர்நாடகாவில் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையும், முன்பெல்லாம் அரசுக்கு எதிராக பேசும் சமூக ஆர்வலர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட மாட்டார்கள் என்பதையும் அவர் கூறினார்.
“20-ஆம் நூற்றாண்டில் நம்மிடையே குவெம்பூ என்பவர் இருந்தார். ஞானபீடம் விருது வாங்கிய அந்த எழுத்தாளர் அறிவுசார் இயக்கத்தை வழிநடத்தினார். அந்த இயக்கத்தில் சேர மதம், சாதி, இனம் எல்லாவற்றையும் கடந்து சேருமாறு அழைத்தார். யு.ஆர். அனந்தமூர்த்தி, என் தந்தை லங்கேஷ், பூர்ணச்சந்திர தேஜஸ்வி, இவர்கள் எல்லாம் ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி எல்லோரையும் எதிர்த்தனர். ஆனால், இவர்கள் எல்லாம் உடல் ரீதியாக தாக்கப்படவில்லை. ஆனால், இப்போது கர்நாடகாவில் கொலை மிரட்டல்கள் அதிகரித்து விட்டன”, என கூறினார்.
கவுரி லங்கேஷ் முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக அரசுக்கு எதிரான கருத்துகளையும் பதிவு செய்தவர். ஏ.ஐ.எஸ்.எஃப். எனப்படும் அனைத்திந்திய மாணவர் சங்கத்தில் உள்ள ஆர்வலர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதியப்படுவதை தொடர்ந்து எதிர்த்தார் கவுரி லங்கேஷ்.