scorecardresearch

தீரமிக்க மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை

வலது சாரிகளை கடுமையான விமர்சித்த கவுரி லங்கேஷ், கடுமையாக கருத்துக்களை முன்வைக்க தயங்காத துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளர்

Gauri Lankesh, journalist

மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், மர்ம நபர்களால் பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ். பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தார்.

சமூக சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும், போராட்டக்காரராகவும் விளங்கிய கவுரி லங்கேஷ், வகுப்பு வாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். மத்திய அரசை விமர்சித்தும், இந்துத்துவாவை எதிர்த்தும் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளையும் இவர் எழுதி வந்தார்.

கோரக்பூரில் நிகழ்ந்த குழந்தைகள் மரணம், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதிய இவர், பணமதிப்பிழக்கம், ரோஹிங்க்யா இனத்தவர் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள் உள்ளிட்டவைகள் குறித்தும் பேசி வந்தார். இவர் இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றுக்காக அவதூறு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதனை பாஜக எம்பி பிரஹலாத் ஜோஷி தொடர்ந்துள்ளார். வலது சாரிகளை கடுமையான விமர்சித்த கவுரி லங்கேஷ், கடுமையாக கருத்துக்களை முன்வைக்க தயங்காத துணிச்சல் மிக்கவர்.

இந்நிலையில், நேற்றிரவு வெளியே சென்று விட்டு காரில் தனது வீட்டுக்கு இவர் திரும்பினார். காரை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்வதற்காக கேட்டை திறக்க முயன்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், துப்பாகியால் சரமாரியாக கவுரி லங்கேஷை சுட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு கண்டனக் குரல்களும் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், கொலை நடந்த இடத்தின் அருகே சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கவுரி லங்கேஷ் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று தனிப்படைகளை அமைத்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி, கடந்த 2015-ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Gauri lankesh journalist who spoke her mind shot dead in bengaluru