லங்கேஷ் பத்திரிக்கையின் ஆசிரியரும், தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ், பெங்களூருவில் உள்ள அவரது வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்துத்துவம், வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்த கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொலையை எதிர்த்து நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வலதுசாரிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான் கவுரி லங்கேஷை கொலை செய்திருப்பர் எனவும் பெரும்பாலான அமைப்புகள் கூறி வருகின்றனர்.
கவுரி லங்கேஷின் கொலை குறித்த செய்திகளை வெளிநாட்டு ஊடகங்கள் எப்படி குறிப்பிட்டுள்ளன என்பதை பார்ப்போம்.
1. தி நியூயார்க் டைம்ஸ்:
ஆங்கில பத்திரிக்கையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘இந்திய பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை’, என நேரடியாக தலைப்பிட்டுள்ளது. இதுகுறித்து இரண்டு கட்டுரைகளை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு கட்டுரையில் கவுரி லங்கேஷ், பயமில்லாத, வெளிப்படையான பத்திரிக்கையாளர் என குறிப்பிட்டுள்ளது. மேலும், அவர் வலதுசாரிய கொள்கை மீதான கடும் விமர்சகர் எனவும் குறிப்பிட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் பெங்களூரு காவல் துறை ஆணையர் ஆகியோரது மேற்கோள்களும் அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. மற்றொரு கட்டுரையில், அவரை கொலை செய்தவர்கள் மற்றும் இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை விவரித்துள்ளது. “மத மூடநம்பிக்கைகள் மற்றும் தீவிர இந்து அரசியலுக்கு எதிராக வெளிப்படையாக பேசும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மீதான தாக்குதல்”, என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையில், எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோரும் இதே விதத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் அக்கட்டுரையில் இடம்பெற்றிருந்தன.
2. பிபிசி:
பிபிசி இணையத்தளம், ’கௌரி லங்கேஷ்: இந்திய பத்திரிக்கையாளர் பெங்களூருவில் சுட்டுக் கொலை’ என தலைப்பிட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்ட விதம் அக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. “இந்தியாவில் சமீப காலங்களில் கொலை செய்யப்பட்ட மிகச்சிறந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ்’ என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துத்துவ தேசியவாதிகளால் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது குறித்து ஆர்வலர்களின் மேற்கோள்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், பெண் பத்திரிக்கையாளர்களுக்கு தொடரும் கொலை மிரட்டல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் குறித்தும் அந்த கட்டுரை பேசுகின்றது.
3. தி கார்டியன்:
’இந்து தீவிரவாதிகளின் கடும் விமர்சகரான இந்திய பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை’ என, தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. “பயமில்லாத, சுதந்திரமாக இயங்கும் பத்திரிக்கையாளரான கவுரி லங்கேஷ், எப்போதும் நீதியின் பக்கம் நின்றிருக்கிறார். அவருடைய செயல்பாடுகளை மௌனமாக்கவே இம்மாதிரி அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.”, என்ற இந்திய பத்திரிக்கை சங்கத்தின் மேற்கோளை குறிப்பிட்டுள்ளது.
4. தி வாஷிங்டன் போஸ்ட்:
இந்தியாவில் சுதந்திரமாக இயங்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மத மூட நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படும் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது. ”மதச்சார்பற்ற தெற்காசிய மக்களாட்சியில், இத்தகைய பெருகிவரும் தீவிரவாதம் மற்றும் சகிப்பின்மை அச்சத்தை விளைவிக்கிறது”, என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணையத்தளத்திலிருந்து.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.