கவுரி லங்கேஷ் கொலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் பேசிய பிறகு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
இடதுசாரி போராளியும், மூத்த பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் பெங்களூருவில் தனது இல்ல வாசலில் நேற்று (செப்டம்பர் 5) மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மதச்சார்பின்மையை வலியுறுத்தி அதிகமாக பேசியும் எழுதியும் வந்தவர் கவுரி. எனவே அவரது மர்ம கொலை, மத்திய பாஜக அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, இந்த பிரச்னையில் நேரடியாக பாஜக மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார். ‘பாஜக, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு எதிராக யாராவது பேசினால், அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். அல்லது தாக்கப்படுகிறார்கள், கொலை செய்யவும் படுகிறார்கள்.’ என குறிப்பிட்டார் ராகுல்.
அவரே தனது இன்னொரு பதிவில், ‘பிரதமர் மோடி, ஒரு திறமையான இந்துத்வா அரசியல்வாதி. அவரது வார்த்தைகளுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று, அவரது அமைப்புக்காக! மற்றொன்று, உலகத்திற்காக!’ என கூறியிருக்கிறார் ராகுல்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் ஸ்மிரிதி இரானி தனது ட்விட்டர் பதிவில், ‘மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். துரிதமாக புலனாய்வு நடத்தி, நீதி வழங்கப்படும் என நம்புகிறேன். கவுரியின் குடும்பத்திற்கு எனது அனுதாபங்கள்!’ என கூறியிருக்கிறார்.
ஸ்மிரிதி இரானியின் ட்விட்டர் பதிவு
கர்நாடகத்தை சேர்ந்தவரான மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, ‘கவுரி கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா பரிந்துரைக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். இன்று நண்பகலில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, ‘மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசியபிறகு, சி.பி.ஐ. விசாரணை அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும். அதற்கு முன்பு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிப்போம். முற்போக்கு எழுத்தாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றார் சித்தராமையா.
நாடு முழுவதும் பத்திரிகையாளர் அமைப்புகளும், இடதுசாரி சிந்தனையாளர்களும், மதச்சார்பற்ற அமைப்பினரும் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.