பகுத்தறிவாதிகள் கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திரா தபோல்கர் ஆகியோர்களை சுட்டுக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அதே ரக துப்பாக்கியால் தான் மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ். பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தார்.
சமூக சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும், போராட்டக்காரராகவும் விளங்கிய கவுரி லங்கேஷ், வகுப்பு வாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். மத்திய அரசை விமர்சித்தும், இந்துத்துவாவை எதிர்த்தும் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளையும் இவர் எழுதி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு காரில் தனது வீட்டுக்கு கவுரி லங்கேஷ் திரும்பினார். காரை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்வதற்காக கேட்டை திறக்க அவர் முயன்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், துப்பாகியால் சரமாரியாக கவுரி லங்கேஷை சுட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கர்நாடக காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள், கவுரியின் உடலை துளைத்தெடுத்த துப்பாக்கிக் குண்டுகள், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, அவரது வீட்டின் கதவு – வீட்டின் நுழைவு வாயிலுக்கு இடைப்பட்ட பகுதியில் கவுரி லங்கேஷை, சுமார் 10 அடி தொலைவில் இருந்து மர்ம நபர்கள் சுட்டுள்ளனர். அதில், மூன்று குண்டுகள் பத்திரிகையாளரின் உடலை துளைத்துள்ளது. ஒரு குண்டு வீட்டின் சுவரை துளைத்துள்ளது என போலீசார் தங்களது விசாரணையின் போது கண்டறிந்துள்ளனர். குண்டுகள் குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், அவை 7.65 mm ரக நாட்டுத் துப்பாக்கியை சேர்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.
அதேசமயம், 7.65 mm ரக நாட்டுத் துப்பாக்கியால் தான் சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி, கடந்த 2015-ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், பகுத்தறிவாதிகள் கோவிந்த் பன்சாரே, நரேந்திரா தபோல்கர் ஆகயோரை சுட்டுக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் இதே வகை துப்பாக்கி தான் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கவுரி லங்கேஷ் மரணம் குறித்து காவல்துறை ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு படை விசாரணைக்கு கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். பத்திரிகையாளர் கொலை தொடர்பாக கர்நாடக அரசு அறிக்கை அனுப்பவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.