பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் அடையாளம் தெரியாத நபர்களால் திங்கள் கிழமை இரவு, அவர் வீட்டின் வெளியே சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வறிக்கைபடி, 1992-ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை சுமார் 27 பத்திரிக்கையாளர்கள் தங்களது எழுத்துகளுக்கான பதிலடியாக கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது. சமீபத்தில் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு ஆணையத்தின் தகவல் படி, பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுதல் மற்றும் கொலையாளிகள் தப்பிக்கும் சம்பவஙக்ளில், இந்தியா 13-வது இடத்தில் உள்ளது.
’Reporters without Borders’ எனும் ‘தகவல் சுதந்திரத்துக்கான எல்லைகள் இல்லா நிருபர்கள் அமைப்பு’ மே மாதம் வெளியிட்ட அறிக்கைபடி, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படும் நாடுகளில், மொத்தமாக உள்ள 180 நாடுகளில், இந்தியா மிக மோசமாக 136-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்து தேசியத்தை எதிர்க்கும் பத்திரிக்கையாளர்கள் மீதான அச்சுறுத்தல் சமீப காலங்களில் அதிகரித்துள்ளதே இதற்கான காரணம் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. “தேசிய அளவில் இந்துத்துவத்திற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் களையெடுக்கப்படுகிறார்கள். அதனால், முதன்மை ஊடகங்கள் தங்களுக்குள்ளாகவே கருத்துகளை தணிக்கை செய்துவிடுகின்றனர்.”, என அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டும் குறைந்தது 5 பத்திரிக்கையாளர்களாவது கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள்:
1. கருண் மிஸ்ரா, தலைவர், ஜன் சந்தேஷ் டைம்ஸ், பிப்ரவரி 14, 2016:
கருண் மிஸ்ராவின் காரை வழிமடக்கி மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
2. ராஜ்தியோ ரஞ்சன், தலைமை செய்தியாளர், இந்துஸ்தான் டைம்ஸ் இந்தி பதிப்பு, மே 13, 2016:
மோட்டார் சைக்கிளில் வந்த 5 நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
3. இந்திரதேவ் யாதவ், ஊடகவியலாளர், தாஸா தொலைக்காட்சி, மே 16, 2016:
இந்திரதேவ் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரை எரித்துக் கொலை செய்தனர்.
4. கிஷோர் தவே, ஜெய்ஹிந்த் சஞ்ச் சமாச்சார், ஆகஸ்டு 22, 2016:
அவரது அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
5. தர்மேந்திர சிங், சிறப்பு நிரூபர், தாய்னிக் பாஸ்கர், நவம்பர் 12, 2016:
சாலையோர கடையில் தேநீர் அருந்திக் கொடிருக்கும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் அவரை சுட்டுக் கொலை செய்தனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் ஆறு பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.