கோவா பானாஜி இடைத்தேர்தல் அம்மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார்.
கோவாவில் பானாஜி, வால்போய் சட்டமன்ற தொகுதிகளுக்கும், டெல்லியில் பாவானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் நந்தியால் ஆகிய 4 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்ற இந்த நான்கு தொகுதிகளிலும் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், கோவா பானாஜி தொகுதியில் முதலமைச்சசர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சோதங்கர் குமாரை விட 4803 வாக்குகள் அதிகம் பெற்று மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தனது முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். மனோகர் பாரிக்கர் 9862 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சோதங்கர் 5,059 வாக்குகளும் பெற்றனர். 301 வாக்குகள் நோட்டாவில் பதிவாகின.
இதன் பின்னர், கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அடுத்த வாரத்தில் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். தற்போது, மனோகர் பாரிக்கர் லக்னோ தொகுதியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினாக பதவி வகித்து வருகிறார்.
இதேபோல, கோவாவின் வால்போய் தொகுதியில், பாஜக வேட்பாளர் விஷ்வஜித் ரானே வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராய் நாய்கை விட 10,066 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார். விஷ்வஜித் ரானே 16,167 வாக்குகளும், ராய் நாய்க் 6101 வாக்குகளையும் பெற்றனர். 454 வாக்குகள் நோட்டாவில் பதிவாகின. இதன்மூலம் கோவாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில், இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றிவாகை சூடியுள்ளது.
டெல்லியின் பாவானா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ராம் ராம் சந்தர் 24,052 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி கட்சியின் ராம் சந்தர் 59,886 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வேத் பிரகாஷ் 35,834 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 31,919 வாக்குகளையும் பெற்றனர்.
ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் பிரம்மாணந்த ரெட்டி வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளரை விட 27,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.