கோவாவில், 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களில், 8 பேர் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்த ஒரு நாளுக்குப் பிறகு, பாஜக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் “ரூ 30-40 கோடி” கொடுத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கோவா பிரிவு பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வியாழக்கிழமை கூறுகையில், எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு மாறியதற்கு காரணம், அதிகாரம், பணம் மற்றும் ஏஜென்சிகளின் அச்சுறுத்தல்கள் அல்லது அவர்களுக்கு எதிரான அரசாங்க நடவடிக்கை தான்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் 30 முதல் 40 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. போகத் தயாராக இல்லாத எங்கள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு அமைச்சர் பதவியும் சேர்த்து ரூ.50 கோடி வரை பங்கு போனது. இந்த பணம் எங்கிருந்து வருகிறது? பெரிய வணிக நிறுவனங்களில் இருந்து, அவர்கள் செய்யும் அனைத்து ஊழல்களிலிருந்தும் தான் இந்த பணம் வருகிறது, எட்டு எம்.எல்.ஏ.க்களுக்காக 240 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். அவர்களுக்கு யார், எந்த நோக்கத்திற்காக நிதி அளித்தனர் என்று ராவ் கேட்டார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்தது. “நாங்கள் எந்த எம்எல்ஏக்களையும் தேடிச் செல்லவில்லை. அவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி, எங்கள் கட்சியில் சேர விரும்புவதாகக் கூறினர்.
நாங்கள் யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை, எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. அவர்கள் தாங்களாகவே, நிபந்தனையின்றி வந்தார்கள். மக்களின் கவனத்தை திசை திருப்பவே காங்கிரஸ் எங்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூற விரும்புகிறது,” என்று பாஜகவின் கோவா பிரிவு தலைவர் சதானந்த் தனவாடே கூறினார்.
எட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சேர்க்கப்படுவது தொடர்பான முடிவு பாஜகவின் மத்திய தலைமையால் எடுக்கப்பட்டது: கட்சியின் உள்ளூர் பிரிவு, தனியாக இவ்வளவு பெரிய முடிவை எடுக்க முடியாது.
இந்த முன்மொழிவு எனக்கு தனிப்பட்ட முறையில் வந்திருந்தால், ஒருவேளை நான் முடியாது என்று கூறியிருப்பேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஜூலை மாதம் சேர முயன்றனர், ஆனால் அந்த நடவடிக்கை நிறைவேறவில்லை. அவர்கள் தேவையான எண்ணிக்கையில் சேர்ந்ததும், பாஜகவின் மத்திய தலைமைக்கு தகவல் தெரிவித்தனர்.
காங்கிரஸின் ராவ், தனது கட்சி தனது தேர்தல் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்ததாகக் கூறினார்.
பிப்ரவரியில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவிலிருந்து காங்கிரஸுக்கு வந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ புதன்கிழமை பாஜகவுக்குத் திரும்பியது குறித்து ராவ், “நாங்கள் அவரைப் புலி என்று நினைத்தோம், ஆனால் அவர் எலியாக மாறிவிட்டார்” என்றார்.
லோபோ மற்றும் சங்கல்ப் அமோன்கர் போன்ற கட்சியிலிருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸில் உட்கட்சி பூசல் இருப்பதாகவும், கட்சி அதன் நீண்டகால உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு அநீதி இழைத்து வருவதாகவும் கூறிய நிலையில், ராவ் அவர்களின் கூற்றுக்களை மறுத்தார்.
காங்கிரஸ் கட்சி இந்த எட்டு பேருக்கும் எந்தத் தவறும் செய்யவில்லை, அநீதியும் செய்யவில்லை... அவர்கள் செய்தது வெட்கக்கேடானது. இது சொந்த தாய்க்கு துரோகம் செய்வது போன்றது.
எவ்வாறாயினும், லோபோஸ் - மைக்கேல் மற்றும் அவரது மனைவி டெலிலா ஆகியோரை கட்சியில் அமர்த்துவதில் காங்கிரஸ் தவறு செய்ததாக ராவ் ஒப்புக்கொண்டார். "நாங்கள் தவறு செய்யவில்லை என்று என்னால் கூற முடியாது. கோவா மக்களிடம் நான் பணிவுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்... எங்கள் தீர்ப்பு தவறாகிவிட்டது, நான் ஒப்புக்கொள்கிறேன், என்றார் ராவ்.
கட்சி தனது உறுப்பினர்களை ஒன்றாக வைத்திருக்க முடியாதது குறித்து கேட்டதற்கு, ராவ், “யாராவது ரூ. 30 கோடியை அவர்கள் முன் வைத்தால், நாங்கள் என்ன செய்வோம்? நாங்கள் அவர்களை சங்கிலியால் பிணைக்க முடியாது.
மக்கள் எங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள், ஆனால் நாங்கள் நின்றுவிட மாட்டோம். நாங்கள் வெளியே சென்று மக்களின் மனதை வெல்வோம்... காங்கிரஸ் கட்சி பிளவுபடவில்லை. எட்டு துரோகிகள் போய்விட்டன. காங்கிரஸின் கதவுகள் அவர்களுக்கு என்றென்றும் மூடப்படும்.
இதை சவாலாக எடுத்துக்கொண்டு மீண்டும் மக்களிடம் செல்வோம், என்றார்.
இதற்கிடையில், காங்கிரஸின் மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்களை, பாஜகவின் சட்டமன்றக் கட்சியுடன் இணைக்க கோவா சட்டமன்றம் அறிவித்தது. மாண்புமிகு சபாநாயகர் இதை கவனத்தில் கொண்டார், அதன்படி, பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களாக (எட்டு) உறுப்பினர்களுக்கு, அவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிதாக பதவியேற்ற எம்எல்ஏக்களுடன் டெல்லி செல்வதாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார், ஆனால் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை வரிசையாக சந்திக்க உள்ளதாக அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“