அமர்நாத் தாக்குதல்: உயிரை பணயம் வைத்து 50 பயணிகளை காப்பாற்றிய டிரைவர்!

"தெய்வீக சக்திதான் என்னை இந்த தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளது”, என அமர்நாத் தாக்குதலில் இருந்து தப்பித்த ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

“தெய்வீக சக்திதான் என்னை இந்த தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளது”, என அமர்நாத் தாக்குதலில் இருந்து தப்பித்த ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் செல்வது வழக்கம். பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த ஜூன் மாதம் துவங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று தரிசித்து வருகின்றனர். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு முகாம்களில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு அமர்நாத் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரை சென்றுவிட்டு குஜராத் மாநில யாத்ரீகர்கள், திங்கள் கிழமை ஜம்முவுக்கு பேருந்தில் திரும்பி கொண்டிருந்தனர். பேருந்து அனந்த்நாக்கின் கானாபால் எனுமிடத்திற்கு வந்தபோது, அதன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் ஆறு பேர் உள்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர். முன்னதாக, காவல்துறையினர் வந்த வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல் துறையினர் அதற்கு தக்க பதிலடி கொடுக்க முயன்றபோது, தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதற்கு பின்னரே, யாத்ரீகர்கள் வந்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தாக்குதல் செய்தி அறிந்து தான் மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் இருந்து தப்பித்த பேருந்து ஓட்டுநர் சலீம் மிர்சா என்பவர், “கடவுள் தான் எனக்கு சக்தியைக் கொடுத்தார். அனைவரையும் காப்பாற்றுவதற்கான பலத்தை அளித்தார். தீவிரவாதிகள் நான் இயக்கிய பேருந்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, நான் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருந்தேன்.”, என அமர்நாத் தாக்குதல் குறித்து பதற்றம் அடங்காமல் கூறினார் சலீம் மிர்சா கூறினார். இவர் தன் பேருந்தில் பயணம் செய்த சுமார் 50 பயணிகளின் உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பேருந்தில் உள்ள அனைவரது விலை மதிப்பற்ற உயிர்களையும் காப்பாற்றிய மிர்சாவை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி வீர தீர செயலுக்கான விருதுக்கு பரிந்துரைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

“எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய மிர்சாவுக்கு நன்றி. அவருடைய பெயரை வீரதீர செயலுக்கான விருதுக்கு பரிந்துரைக்க உள்ளோம்”, என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

×Close
×Close