ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட 3% வரியால் தங்க நகைகளின் விலை நாளை முதல் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தங்கத்தின் மீது 3% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இதனால், தங்கம் கிராமுக்கு சுமார் 60 ரூபாயும், சவரனுக்கு சுமார் 500 ரூபாயும் உயரும் என கணிக்கப்பட்டது.
இதனால், விலை உயர்வை கருத்தில்கொண்டு பொதுமக்கள் பெரும்பாலானோர் கடந்த சில நாட்களாகவே தங்க நகைகளை வாங்க நகைக்கடைகளுக்கு அணிவகுத்தனர்.
இந்நிலையில், நாளை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நடைமுறைக்கு வருகிறது. தங்க நகைகளுக்கு ஏற்கனவே 1% மதிப்புக்கூட்டு வரியும், 1% கலால் வரியும் இருந்தநிலையில், அவை எல்லாம் சேர்த்து 3% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதால், ஒரு சதவீதம் மட்டுமே வரி உயர்த்தப்படுவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், தங்க நகைகள் வியாபாரத்தில் பெருமளவு பாதிப்பு இருக்காது எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.