மகளிரை போற்றும் வகையில் முழுவதும் பெண்களை கொண்டு விமானம் இயக்கம்: ஏர் இந்தியா சாதனை

ஏர் இந்தியா நிறுவனம், முழுவதும் பெண் விமானிகள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு கொல்கத்தாவிலிருந்து திமாபூர் வரையில் விமானத்தை இயக்கியது.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, இன்று (திங்கள் கிழமை) ஏர் இந்தியா நிறுவனம், முழுவதும் பெண் விமானிகள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு கொல்கத்தாவிலிருந்து திமாபூர் வரையில் விமானத்தை இயக்கியது. அந்த விமானம் மீண்டும் திமாபூரிலிருந்து கொல்கத்தா வரையிலும் இயக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், வழித்தடம் ஏஐ709-ஐ கொண்ட ஏர்பஸ் 319 ரக விமானத்தின் விமானிகளாக கேப்டன் அகன்க்‌ஷா வர்மா, கேப்டன் சதோவிஷா பானர்ஜி ஆகியோர் ஓட்டிச் சென்றனர்.

இந்த விமானத்தை ஏர் இந்தியா பொது மேலாளர் நவ்நீத் சித்து உள்ளிட்ட மேலதிகாரிகள் கொடியசைத்து துவங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றனர்.

முதன்முதலாக 1985-ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் பெண் பணியாளர்கள் மற்றும் விமானிகள் அடங்கிய விமானத்தை கொல்கத்தா முதல் சில்ச்சார் வரை இயக்கியது.

அதன்பிறகு, 2017-ஆம் ஆண்டு உலகிலேயே மிக அதிகமான பெண் பணியாளர்கள் அடங்கிய விமானம் டெல்லி – சான் ஃப்ரான்சிஸ்கோ – டெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

×Close
×Close